வேலூர்: வேலூர் கோட்டை மலையில் காட்டிற்கு தீ வைத்த 2 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். தமிழ்நாட்டில் குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க இருக்கிறது. இக்கோடை காலம் நெருங்கும் நிலையில் தினமும் பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வனப்பரப்பை பொருத்தளவில், இலையுதிர் காலம் முடிந்திருக்கும் இவ்வேளையில், கோடை வெயிலால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவ வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்க வனத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைகள், குன்றுகளில் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்க சறுகுகள் அகற்றம் மற்றும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாநகரை சுற்றிலும் மலைகள் உள்ளன.
கோடைக்காலத்தில் இந்த மலைகளில் காணப்படும் செடி, கொடி, புற்களுக்கு வெயில் காலங்களில் மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. குறிப்பாக வேலூர் வனச்சரகத்தில் உள்ள சைதாப்பேட்டை, செங்காநத்தம், கோட்டைமலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தீ வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. மலையில் தங்கி மது குடித்துவிட்டு அங்குள்ள செடி, கொடிகளுக்கு, புற்களுக்கு தீ வைக்கும் சமூகவிரோதிகளை முன்கூட்டியே கண்டறிய சிறப்பு குழுக்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் வனச்சரகர் தரணி தலைமையில் வனவர் நிர்மல்குமார், வனக்காப்பாளர் நவீன்குமார் கொண்ட சிறப்பு குழுவினர் நேற்று மாலை வேலூர் கோட்டை மலைக்கு உட்பட்ட செங்காநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செங்காநத்தம் காப்புக்கட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டிய 2 வாலிபர்களை வனத்துறையினர் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில், வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த இர்பான்(28), பாகத்பாஷா (23) என்பதும், காட்டிற்கு தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களை வேலூர் ஜேஎம்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா, பீடி, சிகரெட், தீப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.