வேலூர்: இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை விஷப்பால் ஊற்றி தம்பதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் ஜீவா (எ) சேட்டுக்கும் (30). இவருக்கும் ஒடுகத்தூர் அடுத்த ஆத்துமேடு பகுதியை சேர்ந்த டயானா (25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், டயானா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 27ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் டயானாவை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.தொடர்ந்து, டயானாவிற்கு ரத்த அளவு குறைந்து இருந்ததால் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், 9 நாட்கள் கழித்து நேற்று தாயையும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். காலை 9 மணியளவில் டயானா குழந்தையுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த தம்பதி மீண்டும் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனால், வீட்டின் அருகே இருந்த பப்பாளி மரத்தை வெட்டி அதில் வடியும் விஷம் நிறைந்த பாலை கல் நெஞ்சம் படைத்த தாயும், தந்தையும் பெற்ற குழந்தை என்றும் பாராமல் பிஞ்சு குழந்தைக்கு ஊற்றியுள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை வாய், மூக்கில் ரத்தம் கொட்டி துடி துடித்து இறந்துள்ளது. பின்னர், இது எதுவுமே நடக்காதது போல், குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளது. உடனே வந்து பார்க்கும்படி டயானா தனது தாய், தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தை இறந்தது தெரியவந்தது. அப்போது, குழந்தை எப்படி இறந்தது என்று டயானாவின் தந்தை சரவணன் கேட்டுள்ளார். அதற்கு, ஜீவா முதல் குழந்தை தேஜா போர்வையை எடுத்து குழந்தை முகத்தில் போட்டு விட்டதால் தான் குழந்தை இறந்தது என்று கூறி இருவரும் நாடகமாடியுள்ளனர். பின்னர், டயானாவின் தந்தையும், தாயும் சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதற்குள் ஜீவா மற்றும் அவரது மனைவி டயானா அவசர அவசரமாக வீட்டின் அருகிலேயே விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் பள்ளம் தோண்டி குழந்தை சடலத்தை புதைத்து உள்ளனர். இதனால், சந்தேகமடைந்த டயானாவின் தந்தை சரவணன் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், கணவன், மனைவியான ஜீவா மற்றும் டயானா இருவரும் பேசி வைத்தது போல் ஒரே பதில் கூறினர். மேலும், பெற்ற குழந்தை இறந்த துக்கம் கூட இல்லாமல் கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். போலீசாரும் விசாரித்தபடி அவர்களை கண்காணித்து கொண்டே இருந்தனர். பின்னர், மாலையில் சூரியன் மறைந்து சற்று இருட்டாக தொடங்கியதும் டயானா தனது முதல் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு நைசாக தப்பியோடி விட்டார். போலீசார் சுதாரித்துக் கொள்வதற்குள் ஜீவாவும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் துரத்தி சென்றனர். அங்கு முழுவதும் மலைகள், காடுகள் என்பதால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் காட்டிற்குள் சென்று தலைமறைவாகி விட்டனர். தனது பெற்றோரை காணாமல் முதல் குழந்தை கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.