Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

வேலூர் மாவட்டத்தில் ஜூன் 2 பள்ளிகள் திறப்பால் தூய்மை பணிகள் தீவிரம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடித்து வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனவே, பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருந்தால், அத்தகைய கட்டிடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கழிவறைகள், மின் சாதனங்கள் பராமரித்திருக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் ஆய்வகம், கழிவறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் ஆகியவற்றை நன்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளிலுள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறையாக பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும்.

பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அனைத்தையும் உள்ளே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையிலும் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் பள்ளி கட்டிடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், மாநகராட்சியில் கமிஷனர் ஜானகி உத்தரவின்பேரில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யப்பட்டது. இதில், 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேற்று மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து பள்ளிகளும் சரியான முறையில் தூய்மை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.