*தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்
வேலூர் : மாடித் தோட்டம் என்பது பலரின் விருப்பம். தரையில் இடம் இல்லாதவர்கள் மாடித் தோட்டம் அமைக்க விரும்புவர். இந்த மாடித் தோட்டத்தில் பூச்செடிகள் மட்டுமல்லாமல், காய்கறிச் செடிகளையும் வளர்த்து வருகின்றனர். தமிழகத்தில் சில காலமாகவே காய்கறிகளின் விலை அதிகமாகவே உள்ளது. இதனையடுத்து பலரும் மாடித் தோட்டத்தை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் அபாயமும் உள்ளது. இதனால் இயற்கை முறையில் தாங்களாகவே காய்கறிகளை விளைவித்து சாப்பிட விரும்புபவர்களுக்கு மாடித் தோட்டம் அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தோட்டக்கலைத்துறை கீழ் மானிய விலையில் மாடித் தோட்டங்களுக்கான செடி வளர்ப்பு பைகள், தென்னை நார்க் கழிவு, விதைகள் மற்றும் உயிர் உரங்களின் தொகுப்புகளை வழங்கி வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் ரூ.450 மதிப்பிலான 300 மாடித் தோட்ட கிட் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் வாங்கி சென்று வருகின்றனர். இதற்கிடையில் மேலும் 5 வகையான பழச்செடிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தோட்டக்கைலைத்துறை சார்பில் மாடித் தோட்ட தொகுப்பில் அடங்கியுள்ள பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.900. ஆனால் மானிய விலையில் ரூ.450 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாடித்தோட்ட தொகுப்பு வாங்குபவர்கள் ரூ.450 ரூபாயை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை வாங்கிக் கொள்ளலாம். வேலூர் மாவட்டத்திற்கு 350 கிட் வந்துள்ளது. தற்போது பொதுமக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மேலும் பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடி வழங்கப்படுகிறது. அதாவது, மா, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, சீத்தாப்பழம் ஆகிய 5 வகையான செடிகள் வழங்கப்படுகிறது.
இந்த தொகுப்பு ரூ.200 ரூபாய் ஆகும். ஆனால் அரசின் மானியம் ரூ.150 போக மீதம் ரூ.50 செலுத்தி பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். மாவட்டத்திற்கு மொத்தம் 10 ஆயிரத்து 200 செடிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசின் மானியம் 150 போக ரூ.50 செலுத்த வேண்டும். பொதுமக்கள் செடிகள் தேவைப்பட்டால் அவர்கள் தங்களின் அருகில் உள்ள வட்டார தோடக்கலை அலுவலகத்தில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
அதோடு பூச்சிக் கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாட்டால் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளும், பழங்களும் விலை உயர்ந்து நஞ்சுடையதாகவே இருந்து வருகிறது. இதற்கு ஆறுதலாக இருந்து வருவது இயற்கை முறையிலான மாடித்தோட்டங்களும், பழச்செடிகள் அதிகளவில் அமைத்து பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.