தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மிக முக்கியமான உயிரியல் பூங்கா அமிர்தி உயிரியல் பூங்கா. வேலூர் நகரத்திலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பூங்கா 1967ம் ஆண்டு திறக்கப்பட்டது. பூங்காவின் பரப்பளவு 25 ஹெக்டேர் கொண்டுள்ளது. இங்கு அழகான நீர்வீழ்ச்சிகளையும் காணலாம். அமிர்தி வனமானது தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனப்பகுதியாகும். இங்கு பல்வேறு வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் நிறைந்துள்ளது. இந்த காட்டின் பாதிப்பகுதி சுற்றுலாத்தலமாகவும், மற்ற பாதி வனவிலங்கு சரணாலயமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். பூங்காவில் உள்ள விலங்குகளில் புள்ளிமான், மங்கூஸ், முள்ளம்பன்றி, நரிகள், குரங்குகள், சிவப்புத் தலைக் கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மற்றும் மலைப்பாம்புகள் ஆகியவை அடங்கும்.
இந்த பூங்கா தாவரவகைப் பிரிவு, பறவைப் பிரிவு, ஊர்வனப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தாவரவகைப் பிரிவில் பல்வேறு வகையான மான்கள் உள்ளன, அதே சமயம் பறவையினப் பிரிவில் பல வகையான பறவைகள் உள்ளன. ஊர்வன பிரிவில் மலைப்பாம்பு மற்றும் நாகப்பாம்பு உட்பட பல வகையான பாம்புகள் உள்ளன. அமிர்தி விலங்கியல் பூங்காவில் கவனத்தை ஈர்க்கக் கூடியதில் முக்கியமான ஒன்று பூங்காவைத் தொடர்ந்து உள்ள மலைப்பகுதியில் சுமார் 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சி ஆகும். மழைக்காலங்களில் மலைப்பகுதியில் இருந்து திரண்டு வரும் மழைநீரானது நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துச் செல்லும் அழகைக்காண ஏராளமானோர் வந்து செல்லும் தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சியின் கீழ் ஓய்வெடுத்தும், குளித்தும் பூங்காவின் இயற்கை அழகை ரசிக்கலாம். ஓங்கி உயர்ந்த பசுமையான மரங்களால் வானிலையானது குளு, குளுவென இருக்கும். இளைப்பாறுதலுக்கான நிழல் தரும் இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்கள் எனச் சுற்றுலாத் தலத்திற்கு ஏற்ற அனைத்து கட்டமைப்புகளும் உள்ளது.
மேலும் நகரத்தின் சலசலப்பில் இருந்து புத்துணர்ச்சியூட்டும் இடைவெளியை வழங்குகிறது. அமிர்தி விலங்கியல் பூங்கா மலையேற்றம் மற்றும் இயற்கை நடைபயணத்திற்கும் ஏற்றதாக உள்ளது. பூங்காவில் நன்கு பராமரிக்கப்பட்ட பல மலையேற்றப் பாதைகள் உள்ளன. அவை பசுமையான காடுகளின் வழியாகச் செல்கின்றன. பார்வையாளர்களுக்கு பூங்காவின் இயற்கை அழகைக் காணவும் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளைக் கண்டறியவும் வாய்ப்பளிக்கிறது.தமிழக அரசு அமிர்தி உயிரியல் பூங்காவை மேம்படுத்த 2013ம் ஆண்டு 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்தது. இந்த வளர்ச்சிப் பணியில் ஓய்வு இடங்கள், குடிநீர் வசதி, உணவு இணைப்புகள், நீர்வீழ்ச்சிகளை இணைக்கும் பாதைகள், தகவல் மையங்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்கள் போன்ற வசதிகள் அடங்கும். குடும்பத்தினருடன் இயற்கையை ரசிக்க அமிர்தி வன உயிரினப் பூங்கா
சிறந்த சுற்றுலாத்தலமாகும்.