நாகர்கோவில்: வெள்ளிமலையில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த சமய வகுப்பு ஆசிரியையிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ராம். இவரது மகள் ரசிகா (22). பி.எஸ்.சி. பட்டதாரி. வெள்ளிமலை ஆசிரமத்தின் கீழ் சமய வகுப்பு ஆசிரியையாக உள்ளார். இந்த நிலையில் நேற்று சமய வகுப்பு ஆசிரியர்களுக்கான பரிசளிப்பு விழா வெள்ளிமலை ஆசிரமத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ரசிகா, தனது மாணவிகளுடன் பஸ்சில் வெள்ளிமலை சென்றார். பஸ் நிறுத்தத்தில் இறங்கி மாணவிகளுடன், ரசிகா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் திடீரென ரசிகா மற்றும் மாணவிகள் மீது மோதுவது போல் வந்தார்.
இதில் அதிர்ச்சி அடைந்து அவர்கள் ரோட்டோரமாக ஒதுங்கிய போது, அந்த வாலிபர் ரசிகாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பினார். ரசிகா மற்றும் மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் தப்பி சென்று விட்டார். இது குறித்து ரசிகா அளித்த புகாரின் பேரில், மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் நடந்துள்ள செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நித்திரவிளை, கொல்லங்கோடு காவல் நிலைய பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன. இடையில் சற்று குறைந்திருந்த செயின் பறிப்பு சம்பவங்கள் மீண்டும் அரங்கேறி வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி செயின் பறிப்பு கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.