கோவை : கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலையேற பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். இந்தாண்டு கடந்த பிப்ரவரி 1 ம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்து வருகின்றனர்.
இதனிடையே மலையேற்றம் செய்யும் பக்தர்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் மலையேறும் பக்தர்களுக்கு மூச்சு திணறல், இருதய பாதிப்பு, உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, வலிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மலையேறும் பக்தர்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் காரணமாக இந்தாண்டில் இதுவரை 15 வயது சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த வெளிச்சம் காரணமாக அதிகளவிலான கூட்டம் வெள்ளிங்கிரி மலையேற வருவதும், உடல்நலம் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாததும்தான் உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது, ‘‘வெள்ளிங்கிரி மலைக்கு ஆரம்ப காலங்களில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே வந்து சென்றனர். தற்போது சோசியல் மீடியா வெளிச்சம் காரணமாக மலையேற வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் மலைப்பகுதியில் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை.
உடல் நலக்குறைவு ஏற்படுபவர்களை டோலி கட்டி தான் கீழே கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ முகாம்கள் இருந்தாலும், சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதிகள் இல்லை. மலைப்பகுதியில் சுனை தவிர குடிநீர் வசதி இல்லை. பிளாஸ்டிக் சோதனை தவிர வேறு எந்த கெடுபிடியும் கிடையாது. உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.