Saturday, September 21, 2024
Home » மானாவாரி வெள்ளாமை… பண்ட மாற்றுமுறையில் பொருட்கள் பரிமாற்றம்…

மானாவாரி வெள்ளாமை… பண்ட மாற்றுமுறையில் பொருட்கள் பரிமாற்றம்…

by Porselvi
Published: Last Updated on

இயற்கை நமக்கு பல கொடைகளை அளித்திருக்கிறது. இவற்றை சரியான முறையில் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியும். புதிய தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் தேவைதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதை தேவைக்காக பயன்படுத்தாமல் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழு நேரமும் அதிலேயே நம்மவர்கள் மூழ்கி கிடக்கிறார்கள். அந்த அளவிற்கு செயற்கை நம்மோடு ஒன்றிவிட்டது. ஆனால் கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், ஆம்போதி அருகே உள்ள செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி இளங்கோ முழுக்க முழுக்க இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார். தமக்குத் தேவையானவற்றை தாமே நிறைவேற்றிக் கொண்டு ஒரு தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். “ கோவைதான் சொந்த ஊர். எம்பிஏ படித்துவிட்டு, பெங்களூரில் உள்ள தனியார் நிதி சார்ந்த நிறுவனத்தில் நிதி ஆராய்ச்சியாளராக வேலை பார்த்தேன். 15 வருடம் கம்ப்யூட்டர் வாழ்க்கை. பெங்களூர் சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். சதாசர்வ காலமும் குளிர்சாதன வசதி, மின்சாதன பொருட்கள், போக்குவரத்து நெரிசல் என 24 மணி நேரமும் நகரத்து வாழ்க்கை நரகமாகிவிட்டது. இத்தகைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பறை ஊராட்சிக்கு உட்பட்ட தேன்கண் கரடு எனும் பகுதியில் நாலரை ஏக்கர் பரப்பளவில் வானம் பார்த்த பூமியை விலை கொடுத்து வாங்கினேன்.

இந்தப் பகுதியில் ஆற்று நீரோ, ஊற்று நீரோ எதுவும் கிடையாது. பெய்யும் மழையை சேமித்து வைத்துதான் விவசாயம் செய்து வருகிறேன். முழுக்க முழுக்க மானாவரி வெள்ளாமைதான் பார்த்து வருகிறேன். எங்களுடைய நிலத்தில் அவரை, துவரை, வேர்க்கடலை, தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம், கீரை உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருக்கிறேன். தாமாகவே காடுகளில் வளரும் தாவரங்களை வளர்த்து சாப்பிடப் பழகிக் கொண்டிருக்கிறோம். அதன்படி காடுகளில் பரவலாக வளர்ந்து கிடக்கும் ஆமணக்கில் இருந்து எண்ணெய் எடுத்து உணவிற்கு பயன்படுத்திக் கொள்கிறோம். ஆமணக்கை வறுத்து, காயவைத்து, இடித்த பிறகே எண்ணெய் எடுக்கிறோம். அதிக எண்ணெய் கிடைப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இதுபோக மருத்துவத்திற்கு, தலைக்கு தேய்ப்பது என்று பலவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறோம். ஆமணக்கு எண்ணெயை எங்கள் தேவைக்கு போக மீதமுள்ளவற்றை
மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம். இந்தப் பகுதியில் காட்டுப்பன்றிகள், மான்கள் அதிகம் இருப்பதால் நாங்கள் நீர் பாய்ச்சும் மேலாண்மை செய்வது கிடையாது. பன்றிகள் வயலுக்குள் வராமல் இருக்க வேலி கட்டி வைத்திருக்கிறேன். பன்றிகளை விரட்டுவதற்கு தோட்டத்திற்கு அருகில் ஒரு பரணும் அமைத்து கண்காணிப்பேன். காய்கறிகளுக்கு உரம் தேவையாக இருப்பதால் சந்தையில் இருந்து மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறேன். நாட்டு மாடுகள் என்பதால் அவற்றின் கழிவுகள் முழுவதும் தோட்டத்திற்கு தரமான உரமாகவும், பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது. எனது வீட்டின் தரைக்கும் சாணியைத்தான் உபயோகிக்கிறேன். முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறேன். கோழிகளுக்கு எந்தவித நோயும் வராமலிருக்க குப்பைமேனி, கீழாநெல்லி இலைகளைக் கொடுப்பேன். இதைக் கோழிகள் சாப்பிடும்போது எந்தவித கல்லீரல் பிரச்சினை, சளி பிரச்சினை இருக்காது. இதுபோக ஆடுகளையும் வைத்து வளர்த்து வருகிறேன்.

எங்களுக்குத் தேவையான சோப்பு, ஷாம்பு, பல்பொடி, பாத்திரம் துலக்குவதற்கான ஜெல் உள்ளிட்டவற்றை ஆமணக்கு, சோற்றுக்கற்றாழை போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் மூலம் தயாரித்துக் கொள்கிறோம். காய்கறிகள் மட்டுமின்றி எங்களது நிலத்தில் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பால் வடியும் இலுப்பை, புங்கை, ஆல், அரசமரம் மற்றும் கனி வகைகளான நெல்லி, சப்போட்டா, மா, வாழை, மாதுளை போன்ற மரங்களையும் வளர்த்து வருகிறேன். இலுப்பை மரம் பெரியதாக வளர்ந்தால் அதில் இருந்து சர்க்கரை எடுக்கலாம். எனக்கு அது ஒரு கரும்புத்தோட்டம். நாவல் மரத்தில் இருந்து பழம் கிடைக்கிறது. இதில் துவர்ப்பு, இனிப்பு இரண்டும் இருப்பதால் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இந்த செடிகள், மரங்கள், கொடிகள் அனைத்திற்கும் மழைநீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இதற்காகவே மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்திருக்கிறேன். வீட்டின் மேல் விழும் மழைநீரை பிவிசி பைப் மூலம் தொட்டியில் சேகரித்து வருகிறேன். அறுவடை செய்யும் தானியங்களைச் சேமித்து வைப்பதற்காகவே ஒரு குயவை உருவாக்கி வைத்திருக்கிறேன். இதை அடுக்கு முறையில் அமைத்திருக்கிறேன். இதில் விதை தானியங்களை ஒரு அறையிலும், உணவிற்கு தேவையான தானியங்களை மற்றொரு இடத்திலும் வைத்து இருக்கிறேன். இதன்மூலம் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த நிலக்கடலை விதையைத்தான் சமீபத்தில் பயன்படுத்திக் கொண்டேன். இங்கு விளையும் அனைத்து காய்கறிகள், பழங்கள் என்று அனைத்தையும் அருகில் இருக்கும் குடும்பத்திடம் பண்ட மாற்ற முறை மூலம் மாற்றி எனக்குத் தேவையான பொருளை வாங்கிக்கொள்வேன். தற்போது எனது லேப்டாப், செல்போன்களுக்காக மட்டுமே சோலார் பவர் பயன்படுத்துகிறேன். மொத்தத்தில் இந்த இயற்கை வாழ்வியல் முறை பயிற்றுநர் இல்லாத பள்ளிக்கூடம்’’ என புன்னகையுடன் கூறுகிறார் இளங்கோ.ஸ்டிப்- காட்டில் மானாவாரியாக வளர்ந்து கிடக்கும் ஆமணக்கு மூலம் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்திக் கொள்கிறார். சோற்றுக்கற்றாழை மூலம் சோப்பு, ஷாம்பு தயாரித்து பயன்படுத்துகிறார்.
தொடர்புக்கு:
இளங்கோ: 95389 31747

 

You may also like

Leave a Comment

8 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi