மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய வெளிக்காடு ஊராட்சியில், தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், நடப்பு நிதியாண்டில் புதிதாக வட்டார நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பண்ணையில் சந்தனம், மகோகனி, தேக்கு, ரோஸ் வுட், மஞ்சள் கடம்பா, வெண்கடம்பா, நாவல், பூவரச மற்றும் புளியமரங்கள் உள்பட 12 ஆயிரம் மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி, அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மரக்கன்றுகள் வளர்ந்த பின்னர், அவை வெளிக்காடு ஊராட்சி மட்டுமின்றி லத்தூர் ஒன்றியத்தில் உள்ள 41 ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு, அக்கிராமங்களில் குறுங்காடுகளை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. மேலும், தங்களின் வீடுகளில் வைத்து வளர்க்க கிராம மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வெளிக்காடு ஊராட்சியில் புதிதாக துவங்கப்பட்ட வட்டார நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணிகளை நேற்று மாலை ஊராட்சி மன்ற தலைவர் வெளிக்காடு ஏழுமலை நேரில் பார்வையிட்டு, மரக்கன்று பராமரிப்பு பணிகளில் ஈடுபட்ட பெண்களிடம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.