* பாதுகாப்பில் 3,000 போலீசார்
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாளை (7ம் தேதி) இரவு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது. ஆரோக்கிய அன்னை பிறந்த நாளை முன்னிட்டு வரும் 8ம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். செப்டம்பர் 7ம் தேதி இரவு பெரிய தேர்பவனியும், மறுநாள் (8ம் தேதி) அன்னையின் பிறப்பு விழாவும் நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளை(7ம் தேதி) இரவு நடக்கிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமை வகித்து தேரை புனிதம் செய்து வைக்கின்றனர். பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் துணைஅதிபர், பங்குதந்தைகள், அருட்சகோதரிகள் முன்னிலையில் ஜெபமாலை, கூட்டுத்திருப்பலி திருத்தல கலையரங்கில் நடக்கிறது.
இதை தொடர்ந்து புனிதம் செய்யப்பட்ட தேர் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். புனித ஆரோக்கிய அன்னை பெரியத்தேரில் எழுந்தருள்வார். அதைத்தொடர்ந்து பெரியத்தேரின் முன்பு 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருவார்கள்.
தேர் பேராலயம் வந்தடைந்தவுடன் திரண்டு நிற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருசேர மரியே வாழ்க, ஆவே மரியா, பசலிக்கா, பசலிக்கா என்ற பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் வகையில் குரல் எழுப்புவார்கள். அப்போது பேராலய கோபுரங்களில் வண்ண மின்விளக்குகள் எரிய விடப்படும். இதை தொடர்ந்து பல்வேறு நிறங்களில் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்னொளியில் ஜொலிக்கும்.
மறுநாள் (8ம் தேதி) காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் விண்மீன் ஆலயத்தில் கூட்டு திருப்பலியுடன் அன்னையின் பிறப்பு விழா நடைபெறும். இதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவடையும். இவ்வாறு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் குடந்தை கோட்டம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 24 மணி நேரமும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதே போல் தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேசன் மற்றும் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் குவிந்து இருப்பார்கள். பேராலய அறைகள், தனியார் விடுதிகளில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து இருப்பார்கள். தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 4 மாவட்டத்தில் இருந்து 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா தேரோட்டம் முன்னிட்டு வரும் 8ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 23ம் தேதி அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.