*சிலம்பம் போட்டிக்கு வந்தபோது பரிதாபம்
நாகப்பட்டினம் : சிலம்பம் போட்டிக்கு வந்த மாணவர்களில் 2 பேர் வேளாங்கண்ணி கடலில் குளித்த போது, அலையில் சிக்கி பலியானார்கள்.வேளாங்கண்ணியில் நடந்து வரும் சிலம்ப போட்டிக்கு திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி வந்தனர். வேளாங்கண்ணி விண்மீன் புதிய திருமண மண்டபத்தில் நடந்த சிலம்ப போட்டியில் கலந்து கொண்ட பின்னர் நேற்று 13 மாணவர்கள் பயிற்சியாளருக்கு தெரியாமல் கடலில் குளித்தனர்.
இதில் மூன்று பேர் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் சென்றனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவையை சேர்ந்த விஷ்வா (11), வீரமலை (13) ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.