ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நேற்று நங்கநல்லூரில் நடைபெற்றது. ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன், மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், செயற்பொறியாளர் ரவிராஜன், வருவாய் அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் துர்காதேவி வரவேற்றார். தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதில், கடந்த 22 ஆண்டுகளாக பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து நங்கநல்லூர் பிரதான சாலை இணைப்பு பணி கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைச்சரிடம் அப்பகுதி மக்களும் நலச்சங்க நிர்வாகிகளும் மனுக்களை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ஆதம்பாக்கம், திருவள்ளுவர் நகர் சாலை, ஆலந்தூர் எம்கேஎன் சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் துவக்கப்படும் என்று உறுதியளித்து பேசினார்.