வேளச்சேரி: பள்ளிகரணை சிக்னல் பகுதியில் வேளச்சேரி – மேடவாக்கம் சாலை, பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை ஆகிய இரு முக்கிய சாலைகள் சந்திப்பதால், தினசரி காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, தாம்பரம் மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் சாமி சிங் ஆலோசனைப்படி, பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தர்ராஜ் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். அதன்படி, மேடவாக்கம் – வேளச்சேரி சாலையில் காமாட்சி மருத்துவமனை சந்திப்பு முதல் வேளச்சேரி ரயில்வே பாலம் இடையே உள்ள மயிலை பாலாஜி நகர் சிக்னல், கைவேலி சிக்னல்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக சிறிது தூரத்தில் யு டர்ன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்து.
இதனால், வேளச்சேரியில் இருந்து கைவேலி சந்திப்பு வழியாக மடிப்பாக்கம் செல்லும் வாகனங்கள் கைவேலி சந்திப்பில் வலதுபுறம் திரும்புவது தடுக்கப்பட்டு அவ்வாகனங்கள் பள்ளிக்கரணை மார்க்கமாக சென்று 200 மீட்டர் தூரம் நேராக சென்று யு டேர்ன் எடுத்து மடிப்பாக்கம் செல்லலாம். மடிப்பாக்கம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கைவேலி சந்திப்பில் வலதுபுறம் திரும்புவது தடுக்கப்பட்டு இடது புறம் திருப்பி அனுப்பப்பட்டு வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் யு டேர்ன் எடுத்து பள்ளிக்கரணை மார்க்கமாக செல்லலாம். மயிலை பாலாஜி நகர் சிக்னலில் திரும்பி செல்லும் வாகனங்கள் 200 மீட்டர் தூரத்தில் யு டர்ன் எடுத்து திருப்பி செல்லலாம்.