சென்னை: சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் வழக்கம் போல காலை வேளையில் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை எதிர்தரப்பு மீது வீசியுள்ளார். நல்வாய்ப்பாக மாணவர்கள் மீது படாமல் அந்த வெடிபொருள் தரையில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதனை கண்ட மாணவர்கள் பலர் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து விரைந்த கிண்டி போலீசார், சில மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் தகவலில் அது நாட்டு வெடிகுண்டு ரகத்தை சேர்ந்தது இல்லை என்றும் பட்டாசு என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் மோதல் தொடர்பாக மொத்தம் 18 மாணவர்களை நீக்கியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவிழாவில் வெடிக்கும் வெடியை வீசி இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. கல்லூரியில் மோதல் ஏற்பட்டபோது வெடி வெடித்தது குறித்து 12 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.