பெரம்பூர்: வாகன சோதனையின்போது போலீசாரின் பிடியில் இருந்து பிரபல ரவுடி தப்பியோடிவிட்டார். சென்னை திருவிக.நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரம்பூர் பேப்பர்மில்ஸ் ரோடு 67 வது வார்டு அலுவலகம் முன்பு நேற்றிரவு 9 மணி அளவில், திருவிக. நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் சரி இல்லாமல் பைக்கில் வந்த நபரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த நபர், ‘’நான் கோயிலுக்கு மாலை போட்டுள்ளேன்’ எனவே, கோயிலுக்கு செல்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் தனது செல்போனில் அந்த நபரை போட்டோ எடுத்துள்ளார். மேலும் பைக் பெட்டியை திறக்க சொன்னபோது அந்த நபர், பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். போலீசார் அவரை துரத்தி சென்றும் அந்த நபரை பிடிக்க முடியவில்லை. இதன்பிறகு பைக்கில் சோதனை செய்து பார்த்தபோது கஞ்சா பொட்டலம் மற்றும் செல்போன் இருந்தது.
இதையடுத்து செல்போனில் எடுத்த அந்த நபரின் படத்தை ஒப்பிட்டு பார்த்தபோது அவர் சென்னை பூங்கா நகர் தேவராஜ் முதல் தெரு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விஜய் என்கின்ற மங்கி விஜய் (29) என்பதும் இவர் மீது 20 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. யானைக்கவுனி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார். இதையடுத்து அவர் விட்டுச்சென்ற பைக்கை கைப்பற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விஜய்யை தொடர்ந்து தேடி வருகின்றனர்.