மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் பதிவு செய்த பிறகே அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வண்டியூர் அருகேயுள்ள திடலில் நாளை (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கும் போது காவல்துறை 50க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்தது. இந்த மாநாட்டுக்கு வருவோர் அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பியிடம் வாகன பாஸ் பெற வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த உத்தரவை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையான வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், ‘‘இதுபோன்று அதிகளவு பொதுமக்கள் கூடும் மாநாடுகளுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்துவது, அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை தான். இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் உள்ளது. இந்த உத்தரவு, மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை. வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் காவல்துறை சோதனை மையம் அமைக்க வேண்டும். மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையிடம் வழங்க வேண்டும். இதனை பதிவு செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை’’ எனக் கூறி வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டனர். அரசு தரப்பில், ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆவணங்கள் இல்லையெனில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.