நாகர்கோவில்: வேகமாக வளர்ந்து வரும் நாகர்கோவில் மாநகரில் நெருக்கடியை தீர்க்க புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. நாகர்கோவிலில் உள்ள வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மாவட்டத்தின் பிரதான பஸ் நிலையம் ஆகும். இங்கிருந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கி வருகின்றன. வெளி மாவட்டங்களுக்கும், இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில் ரூ.55 கோடியில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. வடசேரி பஸ் நிலையத்தின் அருகில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை செயல்படுகிறது. இதில் தற்போது 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதே போல் பஸ் நிலையத்தின் மறுபுறம் சாலையை அடுத்து, ஆம்னி பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒருங்கிணைந்த பஸ் நிலையமாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டனர்.
பஸ் நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கான திட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது. நாள் தோறும் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன. காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலுமான பீக் அவர்ஸில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இடைப்பட்ட நேரங்களில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை என்ன? ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு வாகனங்கள் இந்த சாலைகளை கடக்கின்றன என்பது தொடர்பாக தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு செய்து ஆய்வு அறிக்கை சமர்பித்தது.
வடசேரி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பாலமோர் ரோடு, எம்.எஸ். ரோடு, அசம்பு ரோடு, டிஸ்லரி சாலை பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு நடந்தது. பஸ் நிலையத்துக்கு அருகில் எத்தனை கடைகள் உள்ளன? சராசரியாக நாள் ஒன்றுக்கு எவ்வளவு மக்கள் இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள் என்பது பற்றிய கணக்கெடுப்பும் நடந்தது. இந்த கணக்கெடுப்பின்படி பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், எத்தனை வாகனங்கள் சாலையில் செல்ல முடியும்? பஸ்கள் எந்த வழியாக வெளியேறினால் நெருக்கடி இருக்காது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்துக்கு வடசேரி காய்கறி சந்தை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வடசேரி காய்கறி சந்தையை இடமாற்றம் செய்ய கூடாது என வலியுறுத்தினர். வடசேரி காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு, பஸ் நிலையத்தையொட்டியே கடைகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி வலியுறுத்தியது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள், நீதிமன்றத்தில் வழக்குகள் என இருந்ததால், பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அப்படியே ஆய்வு நிலையில் உள்ளன.
இந்த நிலையில், நாகர்கோவில் மாநகர் வேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும். வாகனங்களின் எண்ணிக்கை என்பது ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நகரில் உள்ள மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை என்பது இப்போது இருக்கும் நிலையை விட பல மடங்கு அதிகரித்து இருக்கும். ஏற்கனவே நாகர்கோவில் மாநகரை சுற்றி உள்ள பல ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, நகர் விரிவாக்கம் செய்யப்படவும் உள்ளது.
இப்போதே வடசேரி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வாகன நெருக்கடி என்பது தீராத தலைவலியாக உள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள் வடசேரி அண்ணா சிலை சந்திப்பை கடந்து செல்வதற்கு பெரும் சிரமம் அடைகின்றன. டிராபிக் போலீசார் நாலாபுறமும் நின்று வாகனங்களை கட்டுப்படுத்தி அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே மற்ற மாநகரில் உள்ளது போல், நாகர்கோவில் மாநகரிலும் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகர் மிகுந்த நெருக்கடியாக உள்ளது. இவ்வளவு நெருக்கடியான பகுதியில் ரூ.55 கோடியில் பஸ் நிலையம் விரிவாக்கம் என்பது நகருக்குள் மேலும் நெருக்கடியை அதிகரிக்கும். எனவே தமிழ்நாடு அரசு நாகர்கோவில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புறநகரில் விரிவாக்கத்துடன் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டார் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் நான்கு வழிச்சாலையில் பஸ் நிலையத்துக்கான இடம் உள்ளது. அது போன்று நகரின் புறநகர் பகுதிகளில் வேறு இடங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, பஸ் நிலையத்தை மாற்றி, நகருக்குள் நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.