Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூஸ் தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்யாததால் மாம்பழங்களுடன் 5 கி.மீ வரை சாலையில் காத்திருக்கும் வாகனங்கள்

*நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சித்தூர் : தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்யாததால் மாம்பழங்களுடன் 5 கி.மீ வரை வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் மாம்பழ ஜூஸ் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைக்கு விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த மாம்பழங்களை வாகனம் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விளைச்சல் அதிகம் காரணமாக முன்எப்போதும் இல்லாத அளவிற்கு தொழிற்சாலையில் மாம்பழங்களை விற்பனை செய்ய வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தொழிற்சாலையில் வாகன நிறுத்துமிடம் நிரம்பி, சாலையோரங்களில் பல கி.மீ தூரம் வாகனங்கள் மாம்பழங்களுடன் நாள்கணக்கில் காத்துக்கிடக்கின்றன.

விவசாயிகள் அறுவடை செய்த மாம்பழங்களை குறித்த நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொழிற்சாலையில் விரைந்து கொள்முதல் செய்யாததால், மாம்பழங்கள் அழுகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சித்தூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ஹெக்டரில் விவசாயிகள் மாங்காய்சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அமோகமாக இருந்தது.

அவற்றை விற்க சித்தூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால் தற்போது, தொழிற்சாலை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் ஏற்படுத்தியதால், அவர்கள் கேட்கும் விலைக்கு மாங்காய்களை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில அரசு மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு, தோத்தாபுரி ரக மாம்பழங்களை ஒரு கிலோ ரூ.8க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்கள் ரூ.2 மற்றும் ரூ.2.50க்கு கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கேட்டால் நீங்கள் வேறு ஒரு தொழிற்சாலைக்கு மாங்காய்களை எடுத்துச் செல்லுங்கள் என கூறுகிறார்கள்.

இதுகுறித்து பலமுறை மண்டல வருவாய் அலுவலகம், மாவட்ட வருவாய் துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இந்நிைலயில், நேற்று சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பகுதியில் ஒட்டி உள்ள தனியார் மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை முன்பு சுமார் 5 கிலோ மீட்டர் வரை மாங்காய் ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலை இருபுறமும் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.