* 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அவலம்
* அப்புறப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கடத்தல் வழக்குளில் பிடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட லாரிகளையும், ராட்சத கிரானைட் கற்களையும் அகற்றிட வேண்டுமெனன பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவில் கிரானைட் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
குறிப்பாக பர்கூர், அச்சமங்கலம், ஜெகதேவி, தொகரப்பள்ளி, மல்லப்பாடி, கொண்டப்பநாயனப்பள்ளி, அஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு கிரானைட் பெரிய அளவிலான கற்கள் எடுத்து வரப்படுகின்றன.
குறிப்பாக ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து கிரானைட் கற்கள் வருகின்றன. இதில் முறையாக அனுமதி பெறாமல் எடுத்து வரப்படும் கிரானைட் கற்கள், லாரிகள் கனிம வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினால் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் லாரிகள் மற்றும் கிரானைட் கற்கள், பர்கூரில் திருப்பத்தூர் கூட்டு ரோட்டில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட லாரிகள், 50க்கும் மேற்பட்ட பெரிய கிரானைட் கற்கள் அந்த இடத்திலேயே இருக்கின்றன.
இதனால் அந்த பகுதி முழுவதும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விஷஜந்துகள் அதிக அளவில் உள்ளதாகவும், எனவே பிடிக்கப்பட்டுள்ள கிரானைட் லாரிகளையும், கற்களையும் அங்கிருந்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பர்கூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகைியல், பர்கூர் தாலுகாவாக 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தாலுகா அலுவலகம் அங்கு செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்பு வரை பிடிக்கப்படும் கிரானைட் கற்கள், லாரிகள் கிருஷ்ணகிரி கொண்டு செல்லப்பட்டு வந்தன.
இப்போது 10 ஆண்டுகளாக இங்கு 20க்கும் மேற்பட்ட லாரிகளையும், 50க்கு மேற்பட்ட கிரானைட் கற்களையும் வைத்துள்ளனர்இந்த பகுதியை சுற்றி எண்டுசெட்டி தெரு, முஸ்லீம் தெரு, காமராஜர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த பகுதியில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகள் மற்றும் கிரானைட் கற்கள் உள்ள பகுதி முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அதிக அளவில் விஷஜந்துகள் உலா வருகின்றன. மேலும் விபத்து அபாயம் உள்ளதால், கற்களையும், லாரிகளையும் இங்கிருந்து அப்புறப்படுத்தி இடத்தை தூய்மைப்படுத்திட வேண்டும் என்றனர்.