ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 பசு மாடுகள் பரிதாபமாக பலியாகின. ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகால் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் பசு மாடுகள் வளர்த்து, அதன்மூலம் வருமானத்தை ஈட்டி பிழைத்து வருகின்றனர். இவ்வாறு மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பசு மாடுகளை, அதன் உரிமையாளர்கள் அலட்சியமாக விட்டு செல்கின்றனர். இதனால், ஸ்ரீபெரும்புதூர் – சிங்கபெருமாள் கோயில் செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுகளுக்கு இடையூறாக சாலையில் மாடுகள் படுத்துக்கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வடகால் பகுதியில் சாலையில் படுத்துகிடந்த மாடுகள் மீது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 4 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.