புழல்: செங்குன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தாய் கண்முன்னே மகன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மாதவரம் அருள்நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகன் கிரீஸ் (12) சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதேவி மற்றும் அவரது மகன் கிரீஸ் ஆகிய இருவரும் மொபட்டில் செங்குன்றம் அடுத்த அலமாதி கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் இருவரும் மாதவரத்துக்கு புறப்பட்டனர். ஸ்ரீதேவி மொபட்டை ஓட்ட, சிறுவன் கிரீஸ் பின்னால் அமர்ந்து வந்துள்ளான். இவர்களது மொபட் செங்குன்றம் அடுத்த திருவள்ளூர் கூட்டு சாலையில் உள்ள நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மொபட்டில் இருந்து சிறுவன் கிரீஸ் கீழே விழுந்தான்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில், வாகனத்தின் சக்கரம் கிரீஸ் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் கிரீஸ் பரிதாபமாக உயிரிழந்தான். விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்றது. தனது கண்முன்னே மகன் துடிதுடித்து இறந்ததைப் பார்த்து ஸ்ரீதேவி கதறி அழுதார். இதில் அவர் லேசாக காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவன் கிரீஸ் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்தில் தாய் கண்முன்னே மகன் தலை நசுங்கி உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.