தோகைமலை : வாகன சோதனையின்போது தப்பிய சொகுசுகாரை 40 கி.மீ. துரத்திச் சென்று போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளித்தலை மெயின் ரோட்டில் நேற்று மணப்பாறை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணப்பாறை பகுதியில் இருந்து குளித்தலை மெயின் ரோட்டிற்கு கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் வந்தது. போலீசார் அந்த காரை மறித்து காரில் வந்த நபர்களிடம் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று காரை இயக்கிய மர்ம நபர்கள் குளித்தலை மெயின்ரோட்டில் அதிவேகமாக ஓட்டிச் சென்றனர்.
இதனால் சந்தேகமடைந்த மணப்பாறை போலீசார் தோகைமலை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து தோகைமலை சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த சொகுசுகாரை மறித்த போலீசார் மீது மோதுவதுபோல் வந்ததால் விலகினர். பின்னர் பாளையம் மெயின் ரோட்டில் அந்த கார் தொடர்ந்து வேகமாக சென்றது. இதையடுத்து அந்த காரை, பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற தோகைமலை இன்ஸ்பெக்டர் கொசூர் அருகேயுள்ள கொத்தமல்லி மேடு பகுதியில் காரை மடக்கினர்.
அப்போது அந்த நபர்கள் காரை வந்த வழியிலேயே திருப்பி மீண்டும் தோகைமலை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றனர். இருப்பினும் தோகைமலை இன்ஸ்பெக்டர் அதிவேகமாக சென்ற சொகுசுகாரை துரத்தினார். இதையறிந்த மர்ம நபர்கள் தோகைமலை அருகேயுள்ள நெசவாளர் காலனி மேற்கு பகுதியில் உள்ள ஒரு தாிசுகாட்டில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். காரை பறிமுதல் செய்து போலீசார் தோகைமலை காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் காரில் வந்தவர்கள் விசாரணைக்கு பயந்து தப்பிச்சென்றது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கார் துரத்தல் சம்பவம் நடந்ததால் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.