அண்ணாநகர்: காய்கறி கடைக்கு வந்த பெண்ணின் மூக்கை உடைத்த உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் ராதா(38). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். நேற்றுமுன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது ராதாவின் அக்கா, ‘’அனைத்து காய்கறிகள் விலையும் அதிகமாக விற்பனை செய்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராதா நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் தான் காய்கறிகள் வாங்கிய கடைக்கு சென்று அனைத்து காய்கறிகளும் அதிக விலைக்கு எப்படி விற்பனை செய்யலாம் என்று கேட்டதுடன் அனைத்து காய்கறிகளையும் தரையில் கொட்டி வாக்குவாதம் செய்துள்ளார்.
இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர், அவரது தம்பி ஆகியோர் ராதாவை சரமாரியாக தாக்கியதில் அவரது மூக்கு உடைந்தது. ரத்தவெள்ளத்தில் நின்ற அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ராதா கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் டைசன்(31), இவரது தம்பி நகேமியா(26) ஆகியோரை கைது செய்தனர். இதன்பின்னர் விசாரணை நடத்திவிட்டு இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.