ஊட்டி : நீலகிரியில் மழை குறைந்த நிலையில் தற்போது மலைக்காய்கறிகளுக்கு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதனை தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், தொட்டிகளில் தண்ணீர் அதிகமாக காணப்படும். அதேபோல், நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும். இதனால், விவசாயிகள் தங்களது காய்கறி தோட்டங்களுக்கு செயற்கை முறையில் தண்ணீர் தெளிப்பது அரிதாகவே காணப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் குறித்த காலத்தில் பருவமழை பெய்வதில்லை. சில நேரங்களில் காலம் தவறி மழை பெய்வதும், அதீத மழை பெய்வது மற்றும் சில சமயங்களில் பருவமழை பெய்யாமல் போய்விடுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு செயற்கை முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் நாள் தோறும் மலைக்காய்கறிகளுக்கு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.