சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் அனைத்து காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கேரட் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், கீரை வகைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லரை வியாபாரத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து பெருமளவு குறைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஊட்டியில் பெய்து வரும் மழை காரணமாக கேர்ட் வரத்து குறைந்துள்ளது.
இதனால், கேரட் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து நேற்று ஒருகிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், புறநகர் கடைகளில் கேரட் ரூ.230க்கு விற்பனையானது. கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை உயர்வு நிலவரம் (கிலோ அளவில்): வெங்காயம் ரூ.38, சின்ன வெங்காயம் ரூ.80, தக்காளி ரூ.35, உருளைகிழங்கு ரூ.45, பீன்ஸ், பீட்ருட் ரூ.80, சவ்சவ் ரூ.30, முள்ளங்கி ரூ.25, முட்டைகோஸ் ரூ.28, வெண்டைக்காய் ரூ.30, காராமணி ரூ.40, பாகல் ரூ.50, புடலங்காய், சுரைக்காய் ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.40, வெள்ளரி ரூ.25, பச்சை மிளகாய் ரூ.45, பட்டாணி ரூ.160, இஞ்சி ரூ.140, பூண்டு ரூ.250, அவரைக்காய் ரூ.60, பீர்க்கன் ரூ.35, எலுமிச்சை ரூ.120, நூக்கல் ரூ.50, கோவைக்காய், கொத்தவரை ரூ.30 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.