*10 கி.மீ பொதுமக்கள் சுற்றி செல்லும் அவலம்
வீரவநல்லூர் : வீரவநல்லூர் அருகே 3 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியால் பொதுமக்கள் 10 கி.மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த புதூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலையடிவாரப் பகுதியான இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவைகளான மருத்துவம், கல்வி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு வீரவநல்லூருக்கு தினமும் சென்று வருகின்றனர். இதற்காக வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தின் கீழ்புறம் பைபாஸ் சாலையிலிருந்து இணைப்பு சாலை உள்ளது.
சுமார் 5 கி.மீட்டர் தூரம் உள்ள இச்சாலையானது சிதலமடைந்து காணப்பட்டதால் புதிய தார்சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக சாலை உடைக்கும் இயந்திரம் மூலம் பழைய சாலை முழுவதுமாக பெயர்த்தெடுக்கப்பட்டது.
இதனையடுத்து சாலையானது ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடுமுரடான நிலைக்கு மாறியது. இந்நிலையில் தோண்டப்பட்டதுடன் பணிகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் சைக்கிள் மற்றும் டூவிலரில் கூட செல்ல முடியாத நிலை இங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ரெட்டியார்புரம் வழியாக வீரவநல்லூருக்கு 10 கி.மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த வேல்முருகன் (35) என்ற வாலிபர் பனை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்க ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட பல சிரமங்கள் ஏற்பட்டு 2 மணி நேரம் வலியால் துடித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் துவங்குவதற்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் சாலைப் பணியானது கிடப்பில் உள்ளதால் மாணவர்களின் நிலைமை கேள்விக் குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிடப்பில் கிடக்கும் சாலைப் பணியை விரைந்து முடித்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.