சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழர்களாகிய நாங்களும், தெலுங்கு மொழி பேசும் மக்களும் சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரி ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியதை பல்வேறு வலைத்தளங்களில் பார்த்தேன். அதில் தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவு செய்யும் வகையிலும், 300 ஆண்டுகளுக்கு முன்பு அரசர்களுக்கு அந்தபுரத்தில் பணிவிடை செய்யவந்தவர்கள்தான், தெலுங்கர்கள் என்று பேசியுள்ளார்.
இது தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவு செய்யும் செயலாகும். தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களையும், தமிழர்களுக்கிடையே சண்டையை மூட்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். இதேபோன்று பல மாதங்களுக்கு முன்பாக தெலுங்கு மொழி பேசுகின்ற அருந்ததிய மக்களை இழிவு செய்து பேசியுள்ளார்கள். எனவே இதற்கு நிரந்தர முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நடிகை கஸ்தூரி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பொது அமைதியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக நாயுடு மகாஜன சங்கம், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் மற்றும் ராம மோகன் ராவ் பாசறை ஆகிய 3 சங்கம் சார்பில் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதேபோல் தேனி அல்லிநகரில் ஏராளமான பெண்கள் நடிகை கஸ்தூரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அல்லிநகரம் போலீசில் நடிகை கஸ்தூரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.