சென்னை கிளாம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கம் என்னும் இடத்தில், ஒரு மலையின் மீது ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருப்பதாக கேள்விப்பட்டோம். உடனே அங்கு செல்ல ஆயத்தமானோம். காலை சுமார் ஏழுமணி அளவில், சென்னை போரூர் பைபாஸ் சாலை வழியாக வண்டலூருக்கு செல்ல திட்டமிட்டோம். காரணம், வண்டலூர் உயிரியல் பூங்காவின் அடுத்த இடதுபக்க சாலையில் இருந்து பயணித்தால், புதுப்பாக்கம் வந்துவிடும். ஆகையால், முதலில் வண்டலூருக்கு செல்ல முடிவெடுத்தோம். காலை நேரம் என்பதால், போக்குவரத்து நெரிசல்கள் இன்றி காணப்பட்டது. கண்களுக்கு எட்டிய வரையில் மிகப் பெரிய கட்டிடங்கள் மட்டுமே கண்களுக்கு தெரிந்தன. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே பச்சை பசேலென்று செடிகளும், மரங்களும் தென்பட்டன.
ஆறடி உயர அனுமன்
இப்படி இயற்கை வளங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோமே? அடுத்து இருபது – முப்பது ஆண்டுகளில் இயற்கை வளங்கள் மிஞ்சுமா? நிலத்தடி நீர் நிலை (Ground Water Level) கேள்விக்குறியாகிவிடுமே? இயற்கை நமக்கு கொடுக்கும் தண்ணீர், இளநீர், பழம், காய், அரிசி, போன்றவைகள் எதிர்காலத்தில் கிடைக்குமா? இப்போதே பாதி பறவை இனங்கள் அழிந்துவிட்டன, மீதமாவது தப்பிக்குமா? போன்ற கேள்விகளை எனக்குள் கேட்டபடியே வண்டலூருக்கு காலை எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு சற்று ஓய்வு எடுத்த பின்னர், வண்டலூர் பூங்காவில் இருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு சென்றால், இடதுபக்கமாக ஒரு சாலை செல்கிறது. அந்த சாலை நேராக கேளம்பாக்கம் தொடுகிறது.அதன் வழியாக நெடுங்குன்றம், வேங்கம்பாக்கம், மாம்பாக்கம், ஆகிய இடங்களை கடந்து சென்றால், புதுப்பாக்கத்திற்கு வந்துவிடலாம். இந்த அனுமன் கோயில் எங்கே இருக்கிறது என்று யாரையுமே கேட்க தேவையில்லை. ரோட்டோரமாக ஆறடிக்கு ஒரு ஆஞ்சநேயரும், ராமர், சீதா, லட்சுமணரோடு மிக பெரிய ஆர்ச் ஒன்றும் காணப்படுகின்றன. அங்கே சற்று நம் வாகனத்தை நிறுத்திவிட்டு, ஆறடி ஆஞ்சநேயரை தரிசித்த பின்னர், ஆர்ச்சுக்குள் நுழைந்து சென்றோம்.
அடிவாரத்தில் ஒரு அனுமன்
வழிநெடுக அர்ச்சனைக்காக பூ, பழக்கடைகள் இருக்கின்றன. இவைகளை கடந்து சற்று உள்ளே சென்றால், அனுமன் கோயிலை அடைந்துவிடலாம். இங்கு இவரின் திருநாமம் “ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ என்பதாகும். வீர ஆஞ்சநேயஸ்வாமி, மலையின் மீது கோயில் கொண்டுள்ளார். இவரை 108 படிகளை ஏறி தரிசிக்க வேண்டும். வயதானவர்களுக்கும், படிகளை ஏற முடியாதவர்களும் சாலை மார்க்கமாகவும் மலைக்கு சென்று, வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அடிவாரத்தில், அழகான குட்டி விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். அவரை தரிசித்த பின்னர், வலது பக்கத்தில் மிகப்பெரிய ஆஞ்சநேயர், கைகளைக் கூப்பியவாறு பல வண்ணங்களில் ஜெக ஜொலிக்கிறார். அதே போல், இடது பக்கத்தில் மிக பெரிய கருடன், கைகளை கூப்பி காட்சியளிக்கிறார். இவர்களை தரிசித்த உடன், மெதுவாக ஒவ்வொரு படிகளாக ஏறி வீர ஆஞ்சநேயஸ்வாமியை காணச் சென்றோம்.
அதீத சாந்நித்தியம் கொண்ட மலை
அந்நேரம் சற்று வெயில் அதிகமாக இருந்தாலும், மலையின் மீது மரங்களும் செடிகளும் இருப்பதால், மெல்லிய காற்று வீசுகிறது. ஆதலால், வெப்பம் தெரியவில்லை. “ஸ்ரீ ராம் ஜெயராம்… ஜெய ஜெய ராம்…’’ என்று மலையின் மீது ஆங்காங்கே இருக்கும் ஒலிபெருக்கி மெதுவாக ஒலிக்கிறது. அதனை நாமும் முணுமுணுத்தபடி அனுமன் இருக்கும் மலையை அடைந்துவிட்டோம். மிகச் சிறிய மலையாக காணப்பட்டாலும், அதன் அதீத சாந்நித்தியத்துவத்தை நம்மால் நன்கு உணரமுடிகிறது. படிகளை ஏறி முடித்ததும் நேராக சென்றால் துவஜஸ்தம்பம் காணப்படும். அங்கு, ராமர் – சீதா – லட்சுமணரோடு அனுமனும் காட்சிதரும் கல்யாண ராமர் தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார். அவரை சேவித்த பின், ராம தூதனை, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயரை தரிசித்தோம். அழகான அனுமார், பூக்களையும் செந்தூரத்தையும் சாற்றிக் கொண்டு மிக அற்புதமாக காட்சியளிக்கிறார். வீர ஆஞ்சநேயஸ்வாமியை கண்ட மாத்திரத்திலேயே வேண்டுதல்கள் எல்லாம் மறந்துவிட்டன. அனுமனை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோன்றியது. ஆகையால், மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று வீர ஆஞ்சநேயஸ்வாமியை தரிசித்தோம்.அதன் பிறகு, மகான் ஸ்ரீ வியாசராஜர், ஏன் அனுமனை இந்த மலையில் பிரதிஷ்டை செய்தார்? என சில கேள்விகளோடு வீர ஆஞ்சநேயஸ்வாமியை கடந்த 30 ஆண்டுகளாக பூஜை செய்யும் சுரேஷ் பட்டாச்சாரியாரிடத்தில் நேர்க்காணல் கண்டோம். அவை அப்படியே…
16 கால் மண்டபம்
இந்த ஸ்தலம் புதுப்பாக்கம் என்னும் ஊரிலே “கஜகிரி’’ என்னும் மலையில், அனுமார் சேவை சாதிக்கிறார். இக்கோயில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில். மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமார். மிக முக்கியமாக, வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர்கள், வனாந்திரம் அதாவது காடு, மலை, கிராம எல்லைப் பகுதிகளில் அனுமன்களை பிரதிஷ்டை செய்வார். அதே போல், இங்கு பார்த்தோமேயானால், மலையின் மீது ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், 16 கால் மண்டபத்தில் மட்டும்தான் ஆஞ்சநேயர் காட்சி கொடுத்தார். பிற்காலத்தில்தான் அனுமாருக்கு கோயில் அமைத்தார்கள். மேலும், சுமார் 50 வருடங்களுக்கு முன்னர், ராமர், சீதா, லட்சுமணர் என தனி ராமர் கோயில் சந்நதி ஒன்றையும் எழுப்பினார்கள். இக்கோயில், வைகானஸ ஆகமம் விதிப்படி, முறையாக பூஜைகளை மேற்கொண்டு வருகிறோம். 108 வைணவத்திருத்தலமான திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள், காணும் பொங்கல் அன்று இந்த ஸ்தலத்திற்கு வருகைபுரிவார். இதனைக் காண திரளான பக்தர்கள் திரள்வார்கள்.
கஜகிரி மலை பெயர் காரணம்
வீர ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ள மலையின் பெயர் “கஜகிரி மலை’’ என்று பெயர். “கஜம்’’ என்றால் யானை. “கிரி’’ என்றால் மலை. கழுகு பார்வையில் இந்த மலையை கண்டால், யானை படுத்து இருப்பது போல் ஒரு தோற்ற அமைப்பாக தெரியும். பக்தர்கள், படியின் வழியே வருகிறார்களே.. அது யானையின் தும்பிக்கைப் போன்றும், வாகனம் மூலம் சாலைவழியாக வருபவர்கள், யானையின் வால் பகுதி போன்றும் கழுகு பார்வையில் இந்த கோயிலை பார்த்தால் காட்சி தெரியும். அதே போல், வியாசராஜதீர்த்தர் பிரதிஷ்டை செய்த அனுமன்கள் எல்லோருக்கும் வால், தலைக்கு மேல் இருக்கும். அதில் ஒரே ஒரு மணியானது கட்டியிருக்கும். இங்கும் அப்படியே காட்சி தருகிறார், ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி. மேலும், அனுமனின் திருமேனி சாளக்கிராம திருமேனியாக இருப்பது இங்கு கூடுதல் சிறப்பு.
ராமாயண காலத்தில் கஜகிரி மலை
இந்த வீர ஆஞ்சநேயர், பிரதிஷ்டை ஆனதற்கு ஒரு கதை உண்டு. ராமாயணம் காலத்தில், லட்சுமணருக்கு தாடையில் அடிபட்டு மயக்க நிலையில் இருக்கும் போது, அதனை சரி செய்ய சஞ்சீவி மலையை நோக்கி பறந்து செல்கிறார், ஆஞ்சநேயர். அப்போது அஸ்தமம் காலம். ஆகையால், சற்றுநேரம் இந்த கஜகிரி மலையிலேயே நித்ய கர்மானுஷ்டானங்களை செய்கிறார். பின்னர், மீண்டும் சஞ்சீவி மலையை நோக்கி பயணிக்கிறார். இதனை தன் சஞ்சார பயணத்தின் போது, வியாசராஜர் அறிகிறார். ஆகையால், அதன் நினைவாக கஜகிரி மலையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்கிறார், என்பது ஸ்தல புராணம். மேலும், யானை வடிவிலான கஜகிரி மலையில் வீர ஆஞ்சநேயர் வீற்றியிருப்பதால், “ஆதி அந்தப்பிரபோ’’ என்னும் இன்னொரு பெயரும் வீர ஆஞ்சநேயருக்கு உள்ளது. “ஆதி’’ என்பது விநாயகரை குறிக்கும். “அந்தம்’’ என்பது ஆஞ்சநேயரை குறிக்கும். அதனால், இவருக்கு ஆதி அந்தப்பிரபோ.. என்றும் பெயருண்டு.
வேண்டுதல் நிறைவேற மட்டைத்தேங்காய்
இந்த வீர ஆஞ்சநேயர் கோயிலில், மிக முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுவது, மட்டைத்தேங்காய் கட்டுவது. என்னென்ன வேண்டுதல்கள் நிறைவேறவேண்டுமோ, அவைகளை மனதில் வேண்டிக் கொண்டு, இங்குள்ள மரத்தில் மட்டைத்தேங்காய் கட்டினால், விரைவாக வீர ஆஞ்சநேயர் வேண்டிய வரத்தை அருள்கிறார். குறிப்பாக, குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு ஆகியவைகளை அனுமன் உடனடியாக நிறைவேற்றுகிறார். (மட்டைத்தேங்காய் இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி, அனுமனின் முன்பாக சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சகரின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்)
சிறப்பான பானகம்
பானகம் நிவேதனம் நரசிம்மருக்கு உகந்தது அல்லவா! ஆனால்,இக்கோயிலில் வீர ஆஞ்சநேயருக்கும் பானகம் நிவேதனம் உகந்தது. இந்த கோயிலின் பிரதான பிரசாதம் பானகம்தான். அதன் பின், புளியோதரை, வடைமாலை, தயிர்சாதம், சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், கதம்பசாதம், என அனுமாருக்கு நிவேதிக்கப்படுகிறது. திருமஞ்சனம் செய்யும் பக்தர்களுக்கு இந்த அனைத்து பிரசாதங்களும் வழங்கப்படும்.
கொண்டாடப்படும் விழாக்கள்
சித்திரை மாதத்தில், சித்திரா பௌர்ணமி அன்று 108 படிகளுக்கும் படிப்பூஜை மிகவும் விசேஷம். வைகாசி விசாகம் கொண்டாடப்படும், ஆனி மாதத்தில், ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி ஒன்பது நாட்களும் உற்சவங்கள், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை தீபம் திருநாளில் கோயிலில் உள்ள ஸ்தூபியில் மூன்று நாட்களும் விளக்கு ஏற்றப்படும். மார்கழி மாதத்தில் ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை, புறப்பாடுகள் ஆகியவை சிறப்பாக நடைபெறும். அதோடு, ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் ஸ்வாமி, கிரிவலம் வருவார். அப்போது மேளதாளங்கள் முழங்க, பஜனைப்பாடல்களோடு சுவாமி கிரிவலம் வருவார். அது போக, கோயில் அருகில் உள்ள மண்டபத்தில், ராமநவமி அன்று திருக்கல்யாணம் நடைபெறும். கைங்கரியம் மற்றும் தொடர்புக்கு: சுரேஷ் பட்டாச்சாரியார் – 9445299105.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 11.30 வரை, மாலை 3.30 முதல் 7.30 வரை, சனிக்கிழமையில், காலை 5.00 முதல் 1.00 வரை, மாலை 3.30 முதல் 9.00 வரை.
எப்படி செல்வது: சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 14கி.மீ., பயணித்தால் இக்கோயிலை அடைந்துவிடலாம். அதே போல், சென்னை வேளச்சேரியில் இருந்து 22 கி.மீ., தொலைவிலும், சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ., தூரத்திலும் இந்த கோயிலை அடைந்துவிடலாம். தனி வாகனத்தில் செல்வது சிறப்பானதாக இருக்கும்.