*ஆம்னி பஸ்சை வழிமறித்து இளைஞர்கள் கொந்தளிப்பு
வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து பெங்களூரூ நோக்கி ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில் சென்றபோது, பேருந்தில் இருந்த ஒரு பயணி, பான் மசாலா போட்டு எச்சிலை ஜன்னல் வழியாக துப்பியுள்ளார்.
அது அந்த வழியே டூவீலரில் சென்ற இளைஞர் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களோடு சேர்ந்து ஆத்துமேடு ஜங்ஷனில் பஸ்சை வழிமறித்தார். தொடர்ந்து அந்த இளைஞர்கள், ‘‘யாருடா எச்சிலை துப்பியது… மரியாதையாக இறங்கி வா… இல்லையென்றால் இந்த பஸ் இங்கிருந்து நகராது’’ என பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட துவங்கினர்.
தகவலறிந்து வந்த போலீசார், ‘‘என்னப்பா பிரச்னை? ஏன் பஸ்சை மறிக்கிறீர்கள்’’ என்று கேட்டனர். அதற்கு அந்த இளைஞர், ‘‘சார் நான் பைக்ல வரும்போது என் மீது எச்சிலை துப்பிட்டாங்க… யாருன்னு கேட்டா யாருமே கீழ வர மாட்றாங்க’’ என கூறினார்.
இதையடுத்து போலீசார் பேருந்தில் ஏறி விசாரித்தபோது யாருமே வாய் திறக்கவில்லை. பின்னர் போலீசார், இளைஞர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பஸ்சில் பிரச்னை நடப்பதையே கண்டு கொள்ளாமல். டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு செல்போனில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் வேடசந்தூர் பகுதியில் அரை மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.