வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமம் லயன்ஸ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(40). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத்துறையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன்(40), ராஜகோபால்(50), அருண்குமார்(25), செம்போடையை சேர்ந்த சுப்பிரமணியன்(55) ஆகியோருடன் நேற்று மதியம் கடலில் மீன் பிடிக்க சென்றார்.வேதாரண்யம் கிழக்கே 16 நாட்டிகல் மைல் தொலைவில் நேற்று நள்ளிரவில் மீன் பிடிக்க வலையை விரித்து வைத்திருந்தனர். சில மணி நேரம் கழித்து வலையுடன் இணைக்கப்பட்டிருந்த மிதவை மிதந்து வந்தது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்து பார்த்தபோது பாதி வலையை காணவில்லை.
அப்போது தான் பைபர் படகில் 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் 350 கிலோ எடையுள்ள வலையை வெட்டி எடுத்து சென்றது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதனால் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு இன்று காலை 6.30 மணிக்கு மீனவர்கள் வந்து மீனவ பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர். மேலும் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வேதாரண்யம் பகுதி மீனவர்களிடம் கடற்கொள்ளையர்கள் உபகரணங்களை பறித்து செல்வது இந்த மாதத்தில் இது 4வது சம்பவமாகும்.
மற்றொரு சம்பவம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூரை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு செருதூரில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென் கிழக்கே 14 நாட்டிகல் மைல் தொலைவில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் வந்த 7 இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி நாகை மீனவர்களை தாக்கினர். பின்னர் படகில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் வாக்கி டாக்கி, செல்போன், ஜிபிஎஸ் கருவிகளை பறித்து சென்றனர். இன்று காலை செருதூருக்கு வந்த 4 மீனவர்கள், கீழையூர் கடலோர காவல் குழும போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.