*முகத்துவாரங்களை தூர்வார வலியுறுத்தல்
வேதாரண்யம் : கடைமடை பகுதியில் உள்ள கடல் முகத்துவாரங்களை தூர்வாரி வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கச்செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி பாசனத்திற்குாக மேட்டூர் அணை கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 18 நாட்களும், கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களும் ஆகியுள்ள நிலையில், கடைமடை பகுதியான வேதாரண்யத்தின் பெரும்பாலன பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பாசன மதகுகள் மற்றும் கதவனைகள் பழுதுபார்க்கப்படாததால் பாசன நீரை அனுமதிக்கப்பட்ட அளவில் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் கொண்டு செல்வதற்கு வழியில்லை. காவிரி டெல்டாவில் கதவணைகளை பழுது பார்க்க சட்டமன்றத்தில் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.
காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கதவணைகள் சீரமைக்கப்படாததால் பாசன பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், கடைமடை பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் வேதாரண்யம் அருகே மணக்காட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடல் முகத்துவார நதிகள், ஆறுகள் மற்றும் வடிகால்கள் பாசன வாய்க்கால்களில் வெங்காய தாமரை செடிகள் புதர் மண்டி கிடப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உயர் மட்ட குழுவை அனுப்பி பாசனப்பகுதிகளை பார்வையிட்டு அறிவியல் பூர்வமான தீர்வு காண முதலமைச்சர் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவிலான தண்ணீரை பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்திற்கான இரண்டாவது கட்ட நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.
இதனால் பாமணி ஆறு, கோரையாறு,முள்ளியாறு உள்ளிட்ட அதன் கிளை நதிகளிலும் தண்ணீர் செல்வதில் பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறு மழை பெய்தால் கூட பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பேரபாயம் உள்ளது. எனவே உடனடியாக உரிய நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.
3.5 லட்சம் ஏக்கர் சாகுபடி இலக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக 3 லட்சம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைமடைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு, தண்ணீர் கிடைப்பதையும், விவசாயிகளின் தேவைகளையும் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.