Saturday, February 24, 2024
Home » சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக தொகுதி பங்கீடு பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக தொகுதி பங்கீடு பேச்சு

by Ranjith

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் விசிக தலைவர் திருமாவளவன், பொது செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் திருமாவளவன் பேட்டியளிக்கையில், ‘‘விசிக சார்பில் தனித்தொகுதிகள் 3, பொது தொகுதி ஒன்று என 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும். தொகுதிகள் என்ன என்பதை அப்போது அறிவிப்போம். பொது தொகுதியில் பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதி வேண்டும் என்று கேட்டுள்ளோம்’’ என்றார்.

2019 மக்களவை தேர்தலில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் பொது செயலாளர் முகமது அபூபக்கர், பொருளாளர் ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாஸித், தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான் குழுவினர் திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் காதர் மொகிதீன் கூறுகையில், ‘‘இந்த முறை எங்களுக்கே ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும்.

ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர்களும் நல்ல முடிவு சொல்வதாக அறிவித்துள்ளனர்’’ என்றார். தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் கட்சியினர் திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஈஸ்வரன் அளித்த பேட்டியில், ‘‘கூட்டணி பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக, முடிவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது’’ என்றார். கடந்த முறை கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi