செய்துங்கநல்லூர் : தூத்துக்குடி – நெல்லை 4 வழிச்சாலையில் வசவப்பபுரத்தில் விபத்தை தடுக்க பயன்படாத வகையில் பேரிக்கார்டர்கள் வைக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி -நெல்லை மாவட்ட எல்லை பகுதியான முறப்பநாடு காவல் நிலையத்திற்குட்பட்ட வசவப்பபுரத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
செந்நெல்பட்டி, கீழப்புத்தனேரி, வசவப்பபுரம் கிராமங்களில் இருந்து வரும் வாகனங்களும், நெல்லையில் இருந்து விட்டிலாபுரம் வழியாக செய்துங்கநல்லூர் செல்லும் வாகனங்கள், இப்பகுதியில் யு டர்ன் செய்து திரும்பிச் செல்கின்றன.
குறிப்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வசவப்பபுரம், அனவரதநல்லூர், விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், இப்
பகுதி தேசிய நெடுஞ்சாலையில் யு டர்ன் செய்து திரும்பி செல்ல வேண்டும்.
முக்கிய சாலை சந்திப்பாக உள்ளதால், விபத்துகளை தடுக்கும் வகையில் நெல்லை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் உள்ள சோதனைச்சாவடி முன்பு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அதேவேளை தூத்துக்குடி -நெல்லை 4 வழிச்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலை பிரிவுக்கு முன்பாக பேரிகார்டுகள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் மாறாக சாலை பிரிவு முடிந்த இடத்தில், அதாவது சோதனை சாவடிக்கு எதிரேயே எதிர்புற சாலையிலும் பேரிகார்டு தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
இது விபத்துகளை தடுக்க எந்த வகையிலும் பயன்படாது என குற்றம்சாட்டியுள்ள இப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தூத்துக்குடி – நெல்லை 4 வழிச்சாலையில் வாகைக்குளம், தெய்வச்செயல்புரம் ஆகிய சாலை சந்திப்புகளில் வைக்கப்பட்டு உள்ளதுபோல் வசவப்பபுரத்திலும் சாலை பிரிவுக்கு முன்பாகவே பேரிகார்டு தடுப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் துறை அதிகாரிகள் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.