போடி/வருசநாடு: போடி மற்றும் வருசநாடு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடவடிக்கை பணிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி அவ்வப்போது ஆங்காங்கே தொடர்ந்து சாரல் மழையாகவும் மிதமான மழையாகவும், சில நேரங்களில் கன மழையாகவும் பெய்து அந்த சீசன் கடந்து வருகிறது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே மழைநீர் வெள்ள மென பெருக்கெடுத்து கண்மாய் குளங்களின் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் அடுத்த மாதம் செப்டம்பரில் வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கு அதற்கான காலச்சூழ்நிலைகள் பருவ காலங்களில் மாற்றம் ஏற்பட்டு அதிகமாக பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையமும் தெரிவித்துள்ளது.
அதனால் தமிழ்நாடு அரசு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் குறுக்கே கடக்கின்ற ஓடைகள், கண்மாய் வாய்க் கால்கள், குறுக்கே பாயும் ஆறுகள் இவைகளினிடையே குறுக்கே கட்டப்பட்டுள்ள மெகா பாலங்களில் மண் மெத்தி கிடப்பதையும், முட்செடிகள் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை நடுவில் இருக்கும் தடுப்பு சுவர் பகுதி இருபுறங்களிலும் தேங்கி கிடக்கும் மண் குவியல்களையும் அள்ளி அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க அரசும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மேற்படி பகுதிகளில் மழை நீர் லேசாக ஆறாக வந்தாலும், வெள்ளமாக வந்தாலும் தங்கு தடையின்றி ஊருக்குள் புகுந்து விடாமலும் போக்குவரத்தும் பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்க மிகவும் எளிதாக மழைநீர் தேங்காமல் தடையின்றி கடந்து செல்வதற்கு தூர்வாரும் பணிகளை போடி மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வேகமாக தீவிரமாக செய்து வருகின்றனர்.
அதன்படி போடியிலிருந்து கோம்பை வரையில் மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் 27 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தின் இடையே போடி ரெங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், நாகலாபுரம் விலக்கு, சங்கராபுரம், வெம்பக்கோட்டை லட்சுமிநாயக்கம்பட்டி, கிருஷ்ணன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி பிரிவு, தேவாரம், மேட்டுப்பட்டி, மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், கோம்பை வரையில் இடையே சாலையில் கடக்கும் கால்வாய்களில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள், சிறு பாலங்கள் சாலையில் நடுவே தடுப்பு சுவர்கள் இருபுறங்களிலும் தேங்கிக் கிடக்கும் மண்ணை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சுமார் 40க்கும் மேற்பட்ட பாலங்கள் இருப்பதால், மேலும் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் மண்களையு ம் சாலை ஒரங்களில் வளர்ந்திருக்கும் செடி கொடி களையும் அகற்றி அப்புறப்படுத்தும் பணி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்பணிகளை மழை வரும் முன் விரைவாக முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்ட பொறியாளர் சாமிநாதன் உத்தரவில் போடி கோட்ட பொறியாளர் தங்கராஜ் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் மழை பெய்தாலும் கண்மாய் கால்வாய்கள் வாய்க்கால் வழியாக திரண்டு வரும் வெள்ளம் சீராக கடந்து செல்வதற்கும் பாலங்களில் அடைப்பு ஏற்படாமல் சாலைகளில் தேங்காமல் கடந்து செல்வதற்கு எளிதாக இருக்கும் தடை இல்லாமல் இருக்கும்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க இருப்பதால் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அரசு உத்தரவின் பேரில் சாலைகளிலும் பல்வேறு வாய்க்கால், ஆறு, குளம் பகுதி வாய்க்கால், சாலை ஓரங்களில் மக்கி கிடக்கும் மண்ணையும் வளர்ந்து கிடக்கும் செடிகளையும் ஜேசிபி இயந்திரம் கொண்டும், தொழிலாளர்களையும் கொண்டும் வெட்டியும் அகற்றி அள்ளியும், பாலங்களின் கீழ் படித்துள்ள அடைப்புகளையும் தூர்வாரி வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
அதிகாரிகள் ஆய்வு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சாமிநாதன் உத்தரவின் பேரில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தை சேர்ந்த வைகைஅணை-வருசநாடு, மயிலாடும்பாறை-முத்தாலம்பாறை, கடமலைக்குண்டு-வெள்ளிமலை உள்ளிட்ட சாலை ஓரங்களில் போக்குவரத்து இடையூறாக உள்ள செடிகள் மற்றும் விபத்து ஏற்படும் விதமாக உள்ள மரக்கிளைகள், பட்டுப்போன மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீர் தடையின்றி செல்லும் வகையில் பாலத்திற்கு அடியில் உள்ள மண் அடைப்புகள் மற்றும் செடிகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தப் பணிகளை ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட உதவி பொறியாளர் திருக்குமரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி பொறியாளர் முருகேஸ்வரன், சாலை ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.