தர்மபுரி: வர்ணாசிரம கொள்கையை கடைபிடிக்கவே, பாஜ அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தர்மபுரிக்கு நேற்று வந்த கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கேரள முதல்வர் உள்பட இந்தியா முழுவதும் 700 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அதே போல், மாநில மாநாடு ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடக்கிறது.
இந்தியாவில் 2021ல் நடத்திய சாதிவாரியான கணக்கெடுப்பை, பாஜ அரசு வெளியிடவில்லை. வர்ணாசிரம கொள்கையை கடைபிடிப்பதால்தான், பாஜ அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இடம் கொடுக்க, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றவேண்டும். பாஜவை சேர்ந்த ராமலிங்கம், தமிழகத்தை 3 ஆக பிரித்தால்தான் ஒன்றிய அரசு நிதி வழங்கும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.