சென்னை: எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரவித் சாஜன் (35). போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது உள்ளன. ஆனால் பிரவித் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர், இவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு, கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில், கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசால் தேடப்படும், தலைமறைவு குற்றவாளியான பிரவித் சாஜனும் வந்தார்.
அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, இவர் எர்ணாகுளம் போலீசார் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. உடனே அவரை வெளியில் விடாமல் பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு எர்ணாகுளம் போலீஸ் கமிஷனருக்கு, தேடப்படும் தலைமறைவு குற்றவாளி பிரவித் சாஜன், மலேசியா நாட்டிலிருந்து விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார் என்ற தகவலையும் அனுப்பினர். தொடர்ந்து, கேரள மாநில தனிப்படை போலீசார், பிரவித் சாஜனை கைது செய்து, எர்ணாகுளம் கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.