Sunday, February 25, 2024
Home » தமிழக நலனுக்கு எதிராக பேச்சு, காந்தி குறித்து சர்ச்சை ஆளுநருக்கு பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி: எம்பி உள்பட 265 பேர் கைது

தமிழக நலனுக்கு எதிராக பேச்சு, காந்தி குறித்து சர்ச்சை ஆளுநருக்கு பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி: எம்பி உள்பட 265 பேர் கைது

by Ranjith

திருவாரூர்: தமிழக நலனுக்கு எதிராகவும், மகாத்மா காந்திக்கு குறித்து சர்ச்சை பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற எம்.பி செல்வராஜ் உட்பட 265 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூருக்கு சென்றார். அங்கு விளமல் பகுதியில் அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட ஆளுநர் ரவி திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் வழியாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அப்போது தமிழக நலனுக்கு எதிராகவும், மகாத்மா காந்திக்கு குறித்து சர்ச்சை பேசிய ஆளுநர் ரவி வருகையை கண்டித்து திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகே ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற நாகை எம்.பி செல்வராஜ் மற்றும் கட்சியினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர், வி.சி.க, மமக, திக, ம.தி.மு.க உட்பட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை திருவாரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

ஆளுநர் சென்ற பின் மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன்பின் திருவாரூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணிக்கு ஆளுநர் வந்தார். அப்போது கீழவெண்மணி அருகே மா.கம்யூ, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில் மா.கம்யூ, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 15 பெண்கள் உள்ளிட்ட 65 பேர் ஆளுநர் வருவதற்கு சற்று முன் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

* ஆளுநரை வரவேற்க மாணவிகளுக்கு மிரட்டல்
ஆளுநரை வரவேற்க வரும்படி மாணவிகளை ஒரு கல்லூரி முதல்வர் மிரட்டும் ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், ‘மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அதிகாலை 6.30 மணிக்கே வர வேண்டும். வராமல் கழுத்தை அறுத்தால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்திப்பீர்கள்’ என கல்லூரி முதல்வர் மிரட்டுகிறார். நீண்ட நேரமாகியும் ஒருவர் கூட வரவில்லை என்ற கோபத்துடன் அடுத்த ஆடியோவை கல்லூரி முதல்வர் வெளியிட்டார். அதில், ‘வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தேர்வு எழுத முடியாது. வருகை பதிவேட்டில் கை வைப்பேன்’ என்று மிரட்டுகிறார்.

* வேளாங்கண்ணி சர்ச், கோயில்களில் வழிபாடு
ஆளுநர் ஆர்.என்.ரவி வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்று ஆளுநர் மெழுகுவர்த்தி ஏந்தி, மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். இதையடுத்து அங்கிருந்து நாகப்பட்டினம் நம்பியார் நகரில் உள்ள புதிய ஒளிமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

*கீழவெண்மணி தியாகியுடன் சந்திப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழவெண்மணியில் மா.கம்யூ., தியாகி பழனிவேலை ஆளுநர் சந்தித்தார். பழனிவேல் வீட்டிற்கு சென்ற ஆளுநரை பழனிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, பழனிவேலுக்கு சால்வை அணிவித்தார். பழனிவேலும் ஆளுநருக்கு சால்வை அணிவித்தார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசினர். அப்போது ஆளுநருக்கு வெண்மணி பிரச்னை குறித்து லாப்டி கிருஷ்ணமாள் ஜெகநாதன் என்பவர் எழுதிய புத்தகத்தை பழனிவேல் வழங்கினார்.

பாஜவுக்கு ஆதரவாக உள்ள ஒரு சங்கத்தில் பழனிவேலின் இளைய மகன் மேகன் என்பவர் சேர்ந்துள்ளார். இதுவே பழனிவேலை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் பேட்டியளித்த பழனிவேல், தன்னை பாஜவில் சேர்க்கதான் ஆளுநர் வருகிறார். அவரை சந்திக்க துளியும் விருப்பமில்லை’ என கூறியது குறிப்பிடத்தக்கது.

* ‘பொருளாதாரத்தில் தமிழ்நாடு வளர்ந்து கொண்டு இருக்கிறது’
நாகையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: பொருளாதார வளர்ச்சியில் 5வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நாம் அனைவருக்கும் சமூக நீதியையும், பொருளாதாரத்தையும் கொடுக்க வேண்டும் என்று தான் நம்புகிறோம். ஆனால் நடைமுறைகள் வேறு மாதிரி இருக்கிறது. தற்போதுள்ள ஏழ்மையை கொண்டு ஒருபோதும் வலிமை மிக்க பாரதத்தை உருவாக்க முடியாது. புதிய இந்தியாவை உருவாக்க பூர்வகுடி மக்கள், மீனவர்களின் பங்களிப்பு முக்கியம். இவ்வாறு கவர்னர் பேசினார்.

You may also like

Leave a Comment

12 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi