Thursday, December 7, 2023
Home » பல வகை தோசை…பாரம்பரிய சட்னி…

பல வகை தோசை…பாரம்பரிய சட்னி…

by Lavanya
Published: Last Updated on

இட்லி,வடை,சாம்பார்… பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல! கடையின் பெயரே இதுதான். சென்னை துரைப்பாக்கம் சந்திரசேகர் அவென்யூவில் இருக்கிறது இந்தக் கடை. சுத்த சைவம். சைவ உணவில் இத்தனை வெரைட்டி இருக்கிறதா? என்று சைவப்பிரியர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சுமார் 150க்கும் அதிகமான டிஷ்களைப் பரிமாறுகிறார்கள் இந்த உணவகத்தில்.இட்லி, வடை, சாம்பார் கடையின் உரிமையாளர்களான தங்கவேல், ரமேஷ் ஆகியோரைச் சந்தித்தோம். “திருநெல்வேலிதான் எனக்கு சொந்த ஊரு. கிட்டதட்ட 25 வருடங்களுக்கும் மேலாக உணவுத்துறையில் அனுபவம். துபாயில் 2002 முதல் 2006 வரை ஆப்பக்கடை வைத்து நடத்தி வந்தேன். பிறகு சென்னைக்கு வந்த நான் நளாஸ் ஆப்பக்கடையைத் தொடங்கி நடத்தி வந்தேன். இதன்பின் முழுக்க முழுக்க நமது தென்மாவட்டம் மற்றும் கேரளா ஸ்டைல் உணவுகளை மக்களுக்கு தர வேண்டும் என்ற நோக்கில் இந்த இட்லி வடா சாம்பார் என்ற உணவகத்தை ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கினேன்.

உணவகம் தொடங்கும்போதே நாம் மறந்த பழைய வகை சட்னிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த வகையில் நாள் ஒன்றுக்கு தேங்காய் சட்னியோடு சேர்த்து பீர்க்கன்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, கொள்ளுசட்னி, சுரைக்காய் சட்னி, மா இஞ்சி சட்னி, பச்சை மாங்காய் சட்னி, பாகற்காய் சட்னி என்று இட்லி, தோசைக்கு கொடுத்து வருகிறோம். எங்களது உணவகத்தில் சூப், டெசர்ட்ஸ், ஸ்டார்ட்டர்ஸ், மெயின் டிஷ் என்று அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஸ்டார்ட்டர்ஸைப் பொருத்த வரையில் மஸ்ரூம் பூண்டு வறுவல், பனீர் பொடி வறுவல், பனீர் இன் கறி லீவ்ஸ், ஹனி பனீர், டிராகன் பனீர், ஹரியாலி பனீர் டிக்கா, மலாய் பனீர் டிக்கா, பேஸ்வாரி சீஸ் பனீர் டிக்கா, லஸ்ஸோனி பனீர் டிக்கா என்று பனீரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட டிஷ்களைக் கொடுத்து வருகிறோம். பெரும்பாலான உணவங்களில் சைவத்தில் கோலா உருண்டைகள் இருக்காது. ஆனால் நாங்கள் அதையும் கொடுத்து வருகிறோம். அனைத்து உணவுகளையும் லைவ் கிச்சன் மூலமே தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம். லைவ் கிச்சனில் சமைக்கும்போது உணவில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்பதை அவர்கள் உட்காரும் இடத்தில் இருந்தே பார்க்க முடியும்.

இதனால் நம்பிக்கையுடன் உணவினை உண்ணுவார்கள். இதற்காகவே உணவகத்தைக் தேடி வரும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்’’ என சுருக்கமாக பேசினார் ரமேஷ்.“காலை டிபனாக வழக்கமான நெய் பொங்கல், பூரி, வடையுடன் உல்லிதீயல், காஞ்சிபுரம் இட்லி, பத்திரியுடன் சிறுபயறு கறி, கடலைக்கறி, கேரளா ஸ்டைலில் புட்டு வித் பனானா, புட்டு வித் கடலைக்கறி என்று ஏராளமான டி‌ஷ் கொடுத்து வருகிறோம். எங்கள் உணவகத்தில் தயார் செய்யப்படும் அனைத்தும் எங்களது சிக்னேச்சர் டிஷ்தான். இளைஞர்களைக் கவரும் வகையில் லாவா சாம்பார் இட்லி, லாவா பனீர் இட்லி தருகிறோம். அதுபோன்று குழந்தைகளைக் கவரும் வகையில் ட்ரை கலர் ஊத்தப்பம், கேரட், பீட்ரூட் என காய்கறிகளால் கலர்புல்லாக தருகிறோம். குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக நவரத்தினா என்ற தோசையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதில் ஆப்பிள், திராட்சை, மாதுளை போன்ற பழங்களைப் போட்டு தருவதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதுபோக தோசையில் மஹாராஜா பிளைன் தோசை, நெய் மைசூர் மசாலா தோசை, நெய் ரவை மாசாலா தோசையும் கொடுக்கிறோம். செட்டிநாடு பொடி இட்லி போன்று பொடி தோசையும், நெய் பொடி தோசை, ரெட் சில்லி ரோஸ்ட் தோசை, சாலட் ரோஸ்ட் தோசை, பனீர் சாலட் ரோஸ்ட் தோசை, டாம் சில்லி ரோஸ்ட் தோசை, பனீர் ஆச்சாரி டிலைட் தோசைகளை எங்களின் யுனிக் டேஸ்ட்டில் தருகிறோம். மதியத்தில் சாப்பாட்டுடன் சேர்த்து சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், பொரியல், ஊறுகாய், மோரும் வழங்குகிறோம். வெரைட்டி ரைஸில் மங்கோலியன் மீல், ட்ராகன் மீல், தயிர் சாதம், சாம்பார் சாதமும் கொடுத்து வருகிறோம். மதியம் மற்றும் மாலை நேரத்தில் முருங்கைக்காய் சூப், வெற்றிலை சூப், ஹெர்பல் சூப், பூண்டு சூப் என கொடுக்கிறோம்.

அசைவத்தில் டிக்கா, ப்ரை, கிரில் என்று சாப்பிட்டவர்கள் சைவத்தில் இதனை சாப்பிடும்போது புது அனுபவத்தைப் பெறுகிறார்கள். அதனால் அசைவப்பிரியர்கள் மத்தியிலும் இந்த வகை சைவ உணவுகளுக்கு அதிக வரவேற்பு கிடைத் திருக்கிறது. உதாரணமாக, சில உணவகங்களில் காலையில் சாப்பிட்டால், மதியம் 3 மணி வரை பசியே எடுக்காது என்று சொல்லுவார்கள். அப்படியிருக்கக் கூடாது. எது சாப்பிட்டாலும் அடுத்த வேளை சாப்பாட்டு நேரத்திற்கு பசி எடுக்க வேண்டும். அதுதான் நல்ல உணவு. அந்த வகையில், எங்கள் உணவை தரமானதாக வழங்குகிறோம். வயிறார சாப்பிட்டு, மனதார வாழ்த்துபவர்களின் வாழ்த்துதான் என்றும் நம்மை வாழ வைக்கும். அதைத்தான் எங்களது தாரக மந்திரமாக வைத்திருக்கிறோம். அனைத்து உணவுகளையும் மக்கள் விரும்பும் ருசியில் கொடுத்து வருவது எங்களுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியைத் தருகிறது’’ என நிறைவாகப் பேசினார் தங்கவேல்.

சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

பருப்பு உசிலி பீன்ஸ்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – 25 கிராம்
கடலைப்பருப்பு – 25 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
மிளகாய் வத்தல் – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை

துவரம்பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு அதோடு காயத்தூள், மிளகாய் வத்தல், சீரகம், சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பருப்புக் கலவையை வடை போல் தட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு கையால் உதிர்க்கவும். அல்லது மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் கலவை மென்மையாகி விடும். பீன்ஸை பொடிதாக நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியில் 50 மில்லி தண்ணீர் ஊற்றி அதோடு நறுக்கி வைத்துள்ள பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும். அடுப்பில் அதே வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு அதனுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும். பிறகு அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் பீன்ஸை சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி தயார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?