சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதேநிலை 17ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் 16ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலின் வடக்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.