Sunday, September 24, 2023
Home » வரம் தரும் வரலட்சுமி விரதம்

வரம் தரும் வரலட்சுமி விரதம்

by Kalaivani Saravanan

25-8-2023

வரலட்சுமி நோன்பு என்பதன் பொருள்

வரலட்சுமி என்கின்ற வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று வாசலை அலங்கரித்து மகாலட்சுமியை நாம் ‘‘வர” வேண்டும் என்று வரவேற்கின்றோம். அப்படி திருமகளை ‘‘வர’’ வேற்கும் பூஜை வரலட்சுமி பூஜை. இன்னொன்று மகாலட்சுமியின் திருவருளுக்காகச் செய்யப்படுகின்ற பூஜை, வரம் என்றால் அருள். மகாலட்சுமியை பிரார்த்தனையால் வரவழைத்து அவளிடம் வரம் வாங்குகின்ற பூஜை வரலட்சுமி பூஜை. அளவில்லாச் செல்வங்களுக்கு உரியவர் மகாலட்சுமித் தாயார்.

அதனால்தான் பெருமாளே தன்னுடைய மார்பில் மகாலட்சுமிக்கு இடம் தந்துள்ளார். பெருமாளுக்கு ‘‘திரு’’ மால், திருமகள் கேள்வன், திருவாழ் மார்பன் என்று பெயர். வடமொழியில் ஸ்ரீ: பதி என்று சொல்வார்கள் பெரியாழ்வார் பெருமாளைப் பாடுகின்ற பொழுது, ‘‘நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’’ என்று மகாலட்சுமிக்கு வாழ்த்து சொல்லி விட்டுத் தான் பெருமாளைப் பாடத்துவங்குகின்றார்.

வரலட்சுமி விரதத்தின் பயன்கள்

வரலட்சுமி விரதம் என்பது தொன்று தொட்டு, நம்முடைய பெரியவர்கள் நமக்கு காட்டி கொடுத்திருக்கும் நோன்பு. அதனுடைய பலன்கள் எண்ணில் அடங்காதது. இருந்தாலும் சிறப்பான சில பலன்களைச் சொல்லலாம் வரலட்சுமி விரதம் இருப்பதால்,

1. குடும்பத்தில் வறுமை அகலும். செல்வம் சேரும். செல்வம் சேர்ந்த குடும்பங்கள் சிறப்பாக வாழும்.

2. குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாத நல்லிணக்கமும் நல்லுறவும் செழிக்கும்.

3. பெண்களுக்கு கணவனின் குணமும் நலனும் வருமானமும் தீர்க்காயுளும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

மாங்கல்ய பலம் விருத்தியாகும். தீர்க்க சுமங்கலித்துவம் கிடைக்கும். எந்தக் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, கோபம், பகை போன்ற உணர்ச்சிகள் இருக்கிறதோ, அங்கே திருமகளின் அருள் குறைந்திருப்பதாகப் பொருள். எங்கு அன்பும் சந்தோஷமும் மரியாதையும் பரோபகாரமும் நிறைந்திருக்கிறதோ, அந்த இடத்தில் நாம் அழைக்காமலேயே மகாலட்சுமி வந்து குடி அமர்வாள்.

மிக எளிய விரதம்

வரலட்சுமி விரதம் மிக எளிய விரதம். முதல் நாள் அதாவது வியாழக்கிழமை (வெள்ளி அன்று வீட்டை துடைப்பதோ, விளக்கு முதலிய பூஜை பொருட்களைத் துலக்குவதோ கிடையாது) வீட்டை நன்றாகக் கழுவித் துடைத்து, தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். தரையிலும் சரி, கூரையிலும் சரி, இந்தத் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். ஒட்டடைகள் படித்திருந்தால் அடிக்க வேண்டும். ஒட்டடை சேரச் சேர காசு தங்காது என்பார்கள். நல்ல பெரிய மாக்கோலம் வாசலில் போட வேண்டும். வண்ணக்கோலமாகப் போட்டால் இன்னும் சிறப்பு. அழகும் திருமகளும் இணை பிரியாதவர்கள். எதெல்லாம் அழகின் அம்சமோ அதெல்லாம் திருமகளின் அம்சம். எங்கே அழகு இருப் பினும் அது திருமகளின் இடமாகிவிடும்.

பூஜை அறையில் என்ன செய்ய வேண்டும்?

பூஜை அறையை பளிங்கு போல் சுத்தப்படுத்த வேண்டும். எல்லா சுவாமி படங்களையும் நன்கு துடைக்க வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்கள் சாற்றி அழகு படுத்த வேண்டும். பூஜைக்கான இடத்தை பசுஞ்சாணத்தால் (அன்று ஒரு நாள் மட்டுமாவது) மெழுக வேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாகத் தூய்மை செய்யலாம். ஆனால், எங்கும் குப்பை கூளங்கள் இருக்கக் கூடாது.

கலசம் தயார் செய்தல்

கலசம் வைப்பதற்காக ஒரு பலகையைத் தயார் செய்யுங்கள். குத்து விளக்கு வைப்பதற்கும் ஒரு சிறு பலகையையோ பீடத்தையோ சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்திருங்கள். குத்து விளக்கை எக்காரணத்தை முன்னிட்டு வெறும் தரையில் வைக்கக் கூடாது. ஒரு பீடத்தில் அல்லது ஒரு இலையில் அல்லது ஒரு தட்டில் வைக்கவும். குத்து விளக்குக்கு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூச்சரம் சுற்றி அழகு படுத்தவும்.

நல்லெண்ணையை நன்கு ஊற்றி பஞ்சு திரியைப் போடவும். நல்லெண்ணையில் மகாலட்சுமியின் வாசம் உண்டு. வரலட்சுமி பூஜை அன்று குத்துவிளக்கின் ஐந்து முகத்தையும் ஏற்றுவதோடு ஒரு தனி அகல் விளக்கில் பசு நெய் விட்டு ஏற்றிவைப்பது மிகச் சிறந்தது. விளக்கு ஏற்றிவிட்டாலே மங்கல கரமான மகாலட்சுமி அந்த இடத்தில் தோன்றிவிட்டாள் என்று பொருள். திருவிளக்கு பூஜை என்பது ஒரு வகையில் மகாலட்சுமி பூஜைதான்.

அந்தியும் சந்தியும் சந்திக்கும் காலை மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி தீபத்தை வழிபடுவது சகல புண்ணியங்களையும் தரும் என்று விரத சூடாமணி கூறுகிறது. தீபத்தில் மகா லட்சுமி நித்யவாசம் செய்கிறாள் என்று பாகதேய பூஷணம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

தீபஜ்யோதி: பரப்ரம்ஹ
தீப ஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்ஜோதி நமோஸ்துதே

– என்பது திருவிளக்கு மந்திரம்

துளசி மாடம்

சிலர் வீட்டிலே துளசி மாடம் வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பவர்கள் வரலட்சுமி பூஜை தினத்தன்று துளசி மாடத்தையும் தூய்மையாக துடைக்க வேண்டும். பழைய பூக்களை எல்லாம் எடுத்துவிட்டு, மாடத்தில் படிந்து இருக்கும் எண்ணெய்க் கறைகளை துடைத்து, முடிந்தால் வண்ணம் தீட்டி துளசி மாடத்தை சுத்தப்படுத்தவும். அங்கும் கோலம் போட வேண்டும். துளசி மாடத்திற்கு மஞ்சள் குங்குமம் பூசி அழகுபடுத்த வேண்டும். அங்கு ஏற்றி வைக்கின்ற தீபமும் பளிச்சென்று இருக்க வேண்டும்.

துளசி மாடம் என்பது பகவான் கண்ணனுக்கு விருப்பமான இடம். எங்கே துளசியின் நறுமணம் வந்தாலும் (“நாற்றத் துழாய் முடி நாராயணன்”-ஆண்டாள்) அங்கே பகவான் கண்ணன் இருப்பான். கண்ணன் துளசி மாடத்தைத் தேடி வருவதால் அந்த பகவானோடு மகாலட்சுமித் தாயாரும் வந்து விடுவாள் என்பதால் துளசி மாட பூஜை என்பது வரலட்சுமி பூஜை அங்கமாகச் செய்ய வேண்டும். தனி துளசி பூஜையும் உண்டு அது வேறு ஒரு நாள் செய்யக்கூடியது.

விஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும்

மகாலட்சுமி பூஜை என்பது மகாவிஷ்ணுவின் பூஜையும் சேர்ந்ததுதான். பகவானும் தாயாரும் பிரிக்க முடியாதபடி இருக்கிறவர்கள். “அவளே அவன். அவனே அவள்” எனும் தத்துவப்படி, பகவானை விட்டு தனியாக தாயார் பூஜையோ, தாயாரை விட்டு தனியாக பகவான் பூஜையோ கிடையாது. எந்த ஸ்தோத்திரத்திலும் பகவானுடைய திருநாமத்தோடு தாயாரின் திருநாமம் வந்துவிடும். நம்முடைய நித்யமான மாதா பிதாக்கள் பகவானும் மகாலட்சுமி தாயாரும்.

நாம் பெற்றோரை வணங்கும்போது, தாய் தந்தையை தனித் தனியாக வணங்குவது கிடையாது, இருவரையும் சேர்த்து நிற்க வைத்துத் தான் வணங்குகின்றோம். அதுதான் சிறப்பு. பெற்றோர் என்கிற பதமே தனியாக அப்பாவையோ அம்மாவையோ குறிப்பிடாது. இருவரையும் இணைத்துத்தான் குறிப்பிடும். அதுபோல் என்றென்றும் நமக்கு மாதா பிதாக்களாக மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் இருப்பதால், இருவரையும் இணைத்துத்தான் பூஜை செய்ய வேண்டும்.

தீர்த்தத்தில் மகாலட்சுமி

பகவானை தீர்த்தன் என்பதால் ஒரு தூய்மையான கலசத்தில் (வெள்ளி, செம்பு, பித்தளை) தூய்மையான நீரை நிரப்பி, அதில் வாசனைப் பொருட்களைப் போட்டுத் தயார் செய்யவும். நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்று இரண்டு பொருள்கள் உண்டு. இந்த இரண்டு பொருளும் சேர்ந்தால்தான் நீர். பிரித்தால் அது பயன்படாது. இங்கே நீரை நிரப்பி ஆவாஹனம் செய்யும் பொழுது மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும், ‘‘இருவராய் வந்தார்; என் முன்னே நின்றார்’’ என்பது போல வந்து அமர்ந்து விடுவார்கள்.

கலசத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து, பூச்சரத்தைச் சுற்றி அல்லது நூலைச் சுற்றி, அலங்கரித்து, மாவிலை வைத்து அதில், தேங்காயை வைக்க வேண்டும். மனைப்பலகையில், ஒரு இலையில் நெல்லை பரப்பி, அதன் மேல் இன்னொரு இலை வைத்து பச்சரிசியைப் பரப்பி, ஓம் அல்லது ஸ்ரீ: என்ற அட்சரத்தை, வலது கை சுட்டு விரலால் எழுதி, கலசத்தை வைக்கலாம். நெல் மணிகள் இல்லை என்று சொன்னால், நுனி வாழை இலையில் பச்சரிசியை மட்டும் பரப்பி, கலசத்தை வைத்தால் போதுமானது.

திருமகள் ஆவாஹனம்

இன்னும் சிலர் தாயாரின் முகத்தை வரைவதற்குப் பதிலாக, வெள்ளியிலும், தங்கமுலாம் பூசப்பட்டும் கடைகளில் கிடைக்கும் தாயாரின் முகங்களை வைத்து அலங்கரிப்பார்கள். அதற்கு உபகரணமாக அழகான கிரீடங்கள், மாலைகள், அணிகலன்கள் விதம்விதமாகக் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் போது, தனிக்கலசம் வைத்து நீர் நிரப்பி, திருமகளை ஆவாகனம் செய்ய வேண்டும்.

நீரில் இருந்து அதாவது கும்பத்திலிருந்து பிம்பத்திற்கு மாற்றி, பூஜை முடிந்தவுடன் பிம்பத்தில் இருந்து கும்பத்திற்கு மாற்றி புனர்பூஜை எனப்படும் பூஜை செய்து யதாஸ்தானம் செய்ய வேண்டும். யதாஸ்தானம் என்பது வேறு ஒன்றும் இல்லை. திருமகளுக்கு விடை தருவது தான். இது எல்லா பூஜைகளிலும் உண்டு.

மகாலட்சுமியை வரவேற்றல்

மகாலட்சுமி தாயாரை சிலர் வீட்டிற்கு வரவழைக்கும் பாவனையில் கலசத்தையோ, அலங்கரிக்கப்பட்ட மகாலட்சுமியையோ, வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே வைத்து, முதல் நாளோ, அல்லது வரலட்சுமி விரத நாளிலோ, நல்ல நேரம் பார்த்து (புதன், சுக்கிரன், குரு எனும் சுபஹோரையில்) ஒரு பூஜையைப் போட்டு வீட்டுக்குள் வரவழைப்பார்கள்.

திருமகள் காலடி எடுத்து வைத்து ஒருநாள் முழுக்க தங்கி, உபசாரங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள். இது அவரவர்கள் குடும்ப வசதி, வழக்கப்படி செய்ய வேண்டும். வீட்டுக்குள் மகாலட்சுமி தாயார் வாசல் வழியே காலடி எடுத்து வைக்கும் பொழுது கீழ்க்கண்ட வரவேற்புப் பாடலையோ, வேத மந்திரங்களையோ (ஸ்ரீசூக்தம்) அல்லது மகாலட்சுமி ஸ்தோத்திரமோ சொல்லி வரவேற்க வேண்டும்.

திருமகளே திருமகளே வருக வருக
குலம் விலங்க நல்லாசி தருக தருக
ஒருகுறையும் இல்லாது அருள்க அருள்க
உன் வரவு நல்வரவாய் அமைக அமைக

எத்தனை வேளை பூஜை செய்வது?

பூஜை என்பது நான்கு காலம் அல்லது ஐந்து காலம் அல்லது ஆறு காலம் என வசதிக்கேற்ப செய்யலாம். நம் சக்தி, ஆர்வம், பக்திதான் இதற்கு எல்லை. முதல் நாள் வியாழக்கிழமை மாலை விளக்கு வைக்கும் பிரதோஷ வேளையில், திருமகளை அழைத்து பூஜை அறையில் எழுந்தருளச் செய்தால், உடனே ஒரு பாயசமோ அல்லது சர்க்கரை கல்கண்டு, பழங்கள் வைத்து நிவேதிக்கலாம். இரவு திருக்காப்பு செய்வதற்கு முன் அவசியம் பால் நிவேதனம் செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை மதியம் விசேஷமான நிவேதனங்கள் செய்து பூஜிக்க வேண்டும். மாலை ஏதேனும் ஒரு சுண்டல் வைத்து நிவேதனம் செய்யலாம்.

இரவு குங்குமப்பூ ஏலக்காய் போட்ட பால் நிவேதனம் செய்ய வேண்டும். மறுநாள் காலை யதாஸ்தான புனர்பூஜைக்கு ஏதேனும் சாத்துக்குடி, மாதுளம், கொய்யா முதலிய வகைகள் வைத்து பூஜை செய்யலாம். ஒரே நாள் பூஜை என்று சொன்னால் காலையில் ஒரு பூஜை, மத்தியானம் பிரதான பூஜை, மாலையில் புனர்பூஜை செய்து, யதா ஸ்தானம் செய்துவிடலாம்.

படைக்க வேண்டிய பொருள்கள்

1. பூக்கள்

மலர்கள் எல்லாம் மகாலட்சுமியின் வாசம் இருக்கும் இடம். எல்லா வகையான வாசனைப் பூக்களையும் பயன்படுத்தலாம். மகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும். பிங்க் நிற தாமரை, நாட்டு ரோஜா வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம். சாமலி பூக்கள், துளசி மாலை அணிவிக்கலாம். மல்லிகைப்பூ வில்வ இலைகள், அத்தி மர இலைகள் போன்றவற்றைப் படைக்கலாம். முக்கியமாக துளசியைப் பயன்படுத்த வேண்டும்

2. தூபம்

‘வாசனையுள்ள சாம்பிராணி பயன்படுத்த வேண்டும். தூபமிடுதல் மிக அவசியம்’ என்கிறது ஆயுர்வேதம்.

பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே.

சாம்பிராணி வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும்; அதிலே அகில் முதலிய வேறுவகை வாசனை பொடிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ‘‘கந்தத் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்’’ என்பது வேத மந்திரம்.

நிவேதனம்

நல்ல மணமிக்க சந்தனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே,
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே,
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.

– என்பது திருவாய்மொழி.

மங்கலப் பொருள்களாக மஞ்சள் பூசிய நோன்புச் சரடு, மஞ்சள், குங்குமம், புடவை, ரவிக்கை, வளையல், கண்ணாடி, சீப்பு முதலிய பொருள்களை வைக்க வேண்டும். நிவேதனமாக பொங்கல், பாயசம், வடை, கொழுக்கட்டை, இனிப்புகள், சுண்டல், பழங்கள், தயிர், பசும்பால், நெய், தேன் படைக்கலாம். இதில் பால், நெய், தயிர், தேன் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருள்கள். மகாலட்சுமிக்கு ஹோமம் செய்யும் பொழுது ஹவிஸ் பொருளாக தேனைப் பயன்படுத்துவார்கள்.

பதினாறு வகையான செல்வங்கள்

வரலட்சுமி விரதத்தால் பதினாறு வகை செல்வங்கள் கிடைக்கும். அதென்ன பதினாறு வகை செல்வங்கள்? கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள். மேலும், அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது.

அகிலமதில் நோயின்மை கல்விதன
தானியம் அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்
வெற்றி
ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும்
பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப்பாய்
– (அபிராமி அந்தாதி பதிகம்)

1. உடலில் நோயின்மை, 2. நல்ல கல்வி, 3. தீதற்ற செல்வம், 4. நிறைந்த தானியம், 5. ஒப்பற்ற அழகு, 6. அழியாப் புகழ், 7. சிறந்த பெருமை, 8. சீரான இளமை, 9. நுண்ணிய அறிவு, 10. குழந்தைச் செல்வம், 11. நல்ல வலிமை, 12. மனத்தில் துணிவு, 13. நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14. எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15. நல்ல ஊழ்(விதி), 16. இன்ப நுகர்ச்சி

நோன்பு கயிறு

அன்று மஞ்சள் சரடு வைத்து துதிக்க வேண்டும். அதை கையிலே கட்டிக்கொள்ள வேண்டும். அது ஒன்பது இழைகளால் இருக்கும். ஒன்பது முடிச்சு போட்டு மஞ்சள் பூசி இருக்கும். இது தீர்க்க சுமங்கலித்துவத்துக் காகவும், குடும்பத்தில் கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி அன்போடு இருக்கவும், கட்டிக் கொள்வது. இதனால், குடும்பம் பொருளாதார ரீதியாக முன்னேறும். அஷ்டலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும். இதில் ஒன்பது முடிச்சுகள் என்பது அஷ்ட லட்சுமிகளையும், ஒன்பதாவது முடிச்சு வரலட்சுமி யையும் குறிக்கும் என்றும் சொல்வார்கள். நவகோள்களால் வரும் வினைத் துன்பம் இந்த நோன்புச்சரடைக் கட்டிக் கொண்டால் நீங்கிவிடும்.

மஞ்சள் சரடை எப்படி அணிவது?

பூஜை எல்லாம் நிறைவேறிய பின் மிக முக்கியமாக இந்த மஞ்சள் நோன்புச் சரடை அணிய வேண்டும். அதன் பின்தான், நாம் படைத்த பிரசாதங்களை உட்கொள்ள வேண்டும். பக்தியோடு நோன்புச்சரடை எடுத்து சுமங்கலி பெண்கள் வலது கரத்தில் அணிவார்கள். (திருமணம் போன்ற சுபகாரியங்களில் கங்கணதாரணம் உண்டு. அப்பொழுது பெண்கள் இடது கையில் கட்டுவார்கள்.) திருமணமான பெண்களுக்கு கணவன் நோன்புச்சரட்டை அணிவிக்க வேண்டும்.

“நவ தந்து ஸமா யுக்தம் நவக்ரந்தி சமன்விதம் பத்ரீயாம் தட்ஷிணே ஹஸ்தேதோரகம்ஹரிவல்லபே” என்று சொல்லி கட்டவேண்டும். `மஹா லட்சுமியே, ஒன்பது இழைகளும், முடிச்சுகளும் கொண்ட மஞ்சள் சரடை உன் பிரசாதமாக என் வலது கையில் கட்டிக்கொள்கிறேன். எனக்கு அருள் புரிய வேண்டும்” என்பது பொருள். திருமணமாகாத பெண்களுக்கு சுமங்கலிப் பெண்கள் ஆசி வழங்கி கட்டி விடுவார்கள், சிலர் தானே அணிந்து கொள்வதும் உண்டு. அவரவர்கள் குல வழக்கப்படி செய்யலாம்.

கதைகளைக் கேட்க வேண்டும்

தீபாராதனைக்கு முன் மகாலட்சுமி விரதத்திற்குரிய சங்கல்பம் செய்து கொண்டு மகாலட்சுமி பற்றிய கதைகளை, பூஜையின் அங்கமாக சிரவணம் செய்ய வேண்டும். ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்க வேண்டும். பக்தியிலே முதன்மையான பக்தி நல்ல விஷயங்களைக் கேட்பதுதான். எனவே கதையை வாசிக்கும் பொழுது கவனமாகக் கேட்க வேண்டும்.

பொதுவாகவே சத் சங்கங்களிலோ, முக்கியமான பூஜைகள் நடக்கும் இடங்களிலோ நாம் அலட்சியமாக இருப்பதோ வேறு வேலைகளைப் பார்ப்பதோ, அனாவசிய பேச்சுக்கள் பேசுவதோ கூடாது. எந்த விஷயமாக இருந்தாலும் கவனமும் ஆர்வமும் முக்கியம். கவனமும் ஆர்வமும் சோம்பலின்மையும் மகாலட்சுமியின் அம்சம். கவனச்சிதறலும் அலட்சியமும் சோம்பலும் தாமதமும் மகாலட்சுமியின் மூத்தவள் (மூத்த தேவியின்) அம்சம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சாருமதி இருந்த விரதம்

சுசந்திர தேவிக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு சாருமதி என்று பெயர். அவள் தன் தாயின் நிலையை கண்டு வருந்தினாள். மகாலட்சுமியிடம் பிராத்தனை செய்தாள். அவள் கனவில் தோன்றிய மகாலட்சுமி, வரலட்சுமி விரத நோன்பு இருந்தால், இந்த தோஷங்கள் தீரும் என்று சொல்லி, வரலட்சுமி நோன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எடுத்துரைத்தாள்.

தன்னுடைய தாய்க்காக சாருமதி மிக மிக சிரத்தையோடு வரலட்சுமி விரதம் இருந்ததைக் கண்டு, தாயும் மனம் திருந்தி, மகளோடு சேர்ந்து வரலட்சுமி நோன்பை கடைபிடித்தாள். கருணைக்கடலான மகாலட்சுமித் தாயார் அவளுடைய நோன்புக்கு இரங்கி, அவள் செய்த தவறுகளை மன்னித்து, பழையபடி அவளை மிகப்பெரிய செல்வ சீமாட்டியாக மாற்றினாள்.

சித்திரநேமி இருந்த விரதம்

சித்திரநேமி என்பவள் தேவர்கள் உலகத்தில் வசித்தவள். தேவர்களுக்கு நீதி வழங்கும் தேவதையாக இருந்ததாக புராணங்களில் உண்டு. அவள் ஒரு முறை பராசக்தியின் கோபத்திற்கு ஆளானாள். அந்த சாபத்தால் அவளை குஷ்ட ரோகம் அண்டியது. படாத கஷ்டம் பட்டாள். காட்டில் திரிந்த அவள் தனக்கு எப்பொழுது சாப விமோசனம் கிடைக்கும் என்று காத்திருந்தாள். அப்பொழுது தேவகன்னியர்கள் சிலர் வரலட்சுமி விரதத்திற்குத் தயாரானதைக் கண்டு விசாரித்தாள். வரலட்சுமி விரதத்தின் மகிமையை அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

அவர்கள் விரதம் இருக்கும் பொழுது சித்திரநேமியும் சேர்ந்து அவர்களுக்கு உதவி, அந்த விரதத்தில் கலந்துகொண்டாள். நோன்பு சரடு அணிந்து கொண்டாள். நோன்பு சரடு கட்டிய மறுகணமே அவனுடைய குஷ்டரோகம் நீங்கியது. அவள் தன்னுடைய கௌரவத்தை அடைந்தாள். செல்வத்தையும், கௌரவத்தையும் அளிப்பதோடு, எத்தகைய தோஷத்தையும் நீக்குவது வரலட்சுமி விரதம் என்பது விளங்குகின்றது. வரலட்சுமி விரத பலனாக தீராத சாபமும் நோயும் தீர்ந்து பூரண ஆரோக்கியமும் செல்வமும் சேரும்.

தேவர்களின் சாபம் தீர்த்த மகாலட்சுமி

ஒருமுறை துர்வாச முனிவர் மகாலட்சுமியின் அற்புதமான மலர் மாலையை இந்திரனுக்கு அளித்தார். அதன் அருமை தெரியாத இந்திரன் ஆணவத்தினால் அதை தன் யானையின் கழுத்தில் போட்டான். யானை ஏதோ ஒரு பொருள் என்று நினைத்து தன்னுடைய துதிக்கையால் கீழே மாலையை பிய்த்துப் போட்டு அதனை மிதித்தது இத்தனை செயல் களையும் கண்ட துர்வாச முனிவர், மகாலட்சுமியின் பிரசாதத்தை இந்திரன் அவமரியாதை செய்துவிட்டானே என்று கோபம் கொண்டு இந்திரனை தரித்திரனாகப் போகும்படி சபித்துவிட்டார்.

அடுத்த கணமே யானையில் இருந்து விழுந்தான். ஆடை ஆபரணங்கள் மறைந்தன. தவித்தான். அந்த நேரம் அசுரர்களும் இந்திரன் உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். மஹாலட்சுமியின் அருள் பெற பாற் கடலைக் கடைந்தார்கள். மகாலட்சுமி தாயார் காட்சி தந்து அவர்கள் இழந்த செல்வங்களைப் பெற வைத்தாள்.

திருமகள் அருள் இல்லாத இடமே இல்லை

மகாலட்சுமி விரதம், சுமங்கலி விரதம், வரலட்சுமி விரதம் எல்லாம் ஒன்றுதான். உலகில் திருமகள் அருள் இல்லாத இடமே இல்லை. எனவே மங்கலப் பொருள்கள் எதுவாக இருந்தாலும், அரிசியில் ஆரம்பித்து (அன்ன லட்சுமி) தங்கம் (சொர்ண லட்சுமி) கல்வி (வித்யா லட்சுமி) என்று மகா லட்சுமியின் வடிவமாகவே பார்க்கிறோம். ஏன் திருமணத்தில் மணப் பெண்ணையும் மகாலட்சுமி ரூபம் என்றுதான் மந்திர பூர்வமாகச் சொல்வார்கள்.

எந்த திருக்கோயில்களிலும் அர்த்தமண்டப முகப்பில் ஸ்ரீமகாலட்சுமி திருவருவம் இருக்கும். சைவ ஆகமங்களிலும் மகாலட்சுமிக்கு இடம் உண்டு. அவர்களுடைய பிரகாரத்தில் மகாலட்சுமிக்கு தனிச் சந்நதி உண்டு. வைணவத்தில் ஒவ்வொரு ஆலயத்திலும் பெருமாளுக்கு வலது புறம் தனிக்கோயில் நாச்சியார் சந்நதி பெரும்பாலும் இருக்கும். பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை தரிசித்து வருவது, பூரண விரத பலன் பெற உதவும். முப்பெரும் தேவியரின் பேரருளும் கிடைக்கும்.

வரலட்சுமி விரதமும் கோ பூஜையும்

மகாலட்சுமிக்குரிய பூஜைகளில் ஒன்று கோ பூஜை. இது பிரதான பகுதியாகவும் இருக்கும். மற்ற பூஜைகளுக்கு அங்கமாகவும் இருக்கும். பசுவின் பின் பகுதியில் மகாலட்சுமியின் சாந்நித்யம் இருக்கிறது. வேத மந்திரங்களில் உலகம் செழிக்க வேண்டும் என்று சொன்னால், பசுக்கள் செழிக்க வேண்டும். (கோ ப்ராம்மணேப்ய சுபம் பவது:) எந்த விசேஷமாக பூஜை (வீட்டிலும் சரி, ஆலயங்களிலும் சரி) நடந்தால், அங்க பூஜையாக கோ பூஜை செய்வது பிரதான பூஜைக்கு பூரண பலம் தரும். பசுவின் பெருமை என்பது எல்லை இல்லாதது. பசுவுக்கு கோமாதா என்று பெயர். செல்வம் என்று பெயர் திருமகளின் பெயரே பசுவுக்கும் உண்டு கோ பூஜை செய்ய மனதில் சந்தோஷமும் தெளிவும் செல்வமும் சேரும்.

நிறைவுரை

இப்படி மகாலட்சுமியினுடைய பெருமையை விவரித்துக் கொண்டே போகலாம். மஹாலட்சுமியின் பேரருளை தினம் தினம் சிந்தித்து வழிபட்டு வள மான வாழ்வு பெறுவோம்.

மகாட்சுமி காயத்ரி மந்திரம்
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!

அஷ்டலட்சுமிக்கு உகந்த இந்தமந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லிவந்தால், வாழ்வில் வளம் அனைத்தையும் பெறலாம்!

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?