*90 சதவீத பணிகள் நிறைவு
*விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
வலங்கைமான் : வலங்கைமான் வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று விரைவில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டை தெருவில் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவர்.
இதேபோல ஆவணிக்கடை ஞாயிறு அன்று ஆலயத்துக்கு அருகில் உள்ள புனித குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். மேலும், இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இத் திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் காவடி, பாடை காவடி, அலகு காவடி, தொட்டில் காவடி பரவை காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர்.
முன்னதாக மிகுந்த நோய் வாய்ப்பட்டு மருத்துவரால் கைவிடப்பட்ட நிலையில் பாடை காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வர். குணமடைந்தவர்கள் இறந்தவர்களை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வதை போல தாரை தப்பட்டைகள் முழங்க ரத்தஉறவு சம்பந்தப்பட்ட உறவினர் ஒருவர் முன்னாள் கொல்லி எடுத்துச் செல்ல அருகிலுள்ள நீர் நிலைகளில் இருந்துபாடை காவடி எடுத்து ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். மாநிலத்தில் எங்கும் நடைபெறாத வகையில் பாடைக்காவடி திருவிழா வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
நோய் வாய்பட்ட பக்தர்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் கோயிலில் தங்குவதாக அம்மனை வேண்டிக் கொள்வர் .இவ்வாறு இரவு நேரங்களில் தங்குவதற்கு உரிய இடமில்லாத நிலையில் அப்பகுதியில் மூடப்பட்ட வணிக நிறுவனங்களில் வளாகத்தில் படுத்து உறங்குவர். மேலும் மழை காலங்களில் பக்தர்கள் திறந்த வெளியில் தங்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். பக்தர்கள் நலம் கருதி அவர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட வேண்டும் என பக்தர்களால் கடந்த சில ஆண்டுகளாக தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பக்தர்களின் நலன் கருதி 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் இருந்த திருமண மண்டபத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 2022- 2023ம் ஆண்டிற்கான கோயில் நிதி மூலம் தரைதளம் மற்றும் மேல்தளத்துடன் கூடிய முடிகாணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டுவதற்கு அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, முடிகாணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகின்றது. தற்போது 90% பணிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவுற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.