திருப்போரூர்: நாவலூர் விஏஓ அலுவலகம் மழைநீரில் மிதப்பதால் அக்கட்டிடத்தினை அகற்றிவிட்டு, நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான நாவலூர் ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ளது. அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாவலூரில் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மென்பொருள் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. தாழம்பூர் காவல் நிலையம், நாவலூர் விஏஓ அலுவலகம், துணை சுகாதார நிலையம் போன்றவை ஓஎம்ஆர் சாலையில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.
நாவலூர் விஏஓ அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமானோர் சொத்து வரி செலுத்துதல், பட்டா பெயர் மாற்றம், நீக்கல், சேர்த்தல், சாதி, வருமான, இருப்பிடச்சான்று பெறுதல் ள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வருகின்றனர். இந்த அலுவலகம் மிகச்சிறிய அளவில் இருப்பதோடு 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால், பல இடங்களில் ஒழுகி சிறிய மழை பெய்தாலே கட்டிடம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம்போல் தேங்கி நிற்கும் அளவிற்கு உள்ளது. நாவலூர் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், பொதுமக்கள் அனைவரும் தண்ணீரில் நனைந்து சென்று அலுவலத்தின் உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாவலூர் கிராமத்தின் வருவாய்த்துறை ஆவணங்கள் அனைத்தும் இந்த அலுவலகத்தில்தான் வைக்கப்படுகிறது. ஆகவே, நாவலூர் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை புதியதாக பொதுமக்கள் அமரும் வகையில் பெரியதாகவும், நவீன வசதிகளுடனும் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.