சென்னை: 10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு வரும் 11ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. வெறும் 3 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்ட காலக்கெடு 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டும் கூட, ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதனால், வன்னியர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த தரவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து அடுத்த 10 நாள்களுக்குள் பரிந்துரை அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும். அதனடிப்படையில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.