விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான மாநில வன்னியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று துவங்கி நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வன்னியர் சங்க நிர்வாகிகள் வருகை தந்தது உள்ளனர். குறிப்பாக கட்சியினுடைய கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூத்தா அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், புதுவை மாநில அமைப்பாளர் கணபதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; 1980ல் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், வன்னியர்களுக்காக செயல்பட்டு வருகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம். கடுமையான போராட்டம் நடைபெறாமல் இருப்பது அரசின் கையில்தான் உள்ளது. வன்னியர் சங்க செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது என அவர் கூறினார்.
இதையடுத்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; இந்த கட்சி வளர்வதற்காக எவ்வளவோ பேர் பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறார்கள். சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர். அடித்தட்டு மக்களுக்கான கட்சியாக தொடர்ந்து அவர்களது முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வருகின்ற கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அன்புமணி வராவிட்டாலும் கூட்டம் நடைபெறும். அன்புமணி நீக்குவதாக கூறப்பட்ட தகவல் வதந்தி. 3 நாட்களாக சுமூகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் காலத்திற்குப் பிறகும் இந்த கட்சியை வழி நடத்துபவர் அன்புமணி ராமதாஸ் தான் என அவர் தெரிவித்தார்.