தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியை கத்தியால் சரமாரி வெட்டி ₹8 லட்சம், ஐபோன், கூகுள்பேட் பறித்துசென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் பாபு (47). தண்டையார்பேட்டை வரதராஜபெருமாள் கோயில் தெருவில் இரும்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவர், நேற்று இரவு மண்ணடி பகுதியில் உள்ள இரும்புக்கடைகளில் கலெக்ஷன் பணம் ₹8 லட்சம் வாங்கிக் கொண்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.
இரவு 11 மணி அளவில் வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோடு வந்தபோது, பின்தொடர்ந்து 2 பைக்கில் வந்த 4 பேர், பிரகாஷ்பாபுவின் பைக் மீது மோதி கீழே தள்ளினர். அவர் கீழே விழுந்ததும் 4 பேரும் பண பையை பறிக்க முயன்றனர். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரி வெட்டிவிட்டு ₹8 லட்சம், ஐபோன், கூகுள் பேட் ஆகியவை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதுகுறித்து பிரகாஷ்பாபு காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.