Friday, April 19, 2024
Home » வஞ்சிர மீன் குழம்பு – இறால் வறுத்த சோறு

வஞ்சிர மீன் குழம்பு – இறால் வறுத்த சோறு

by Lavanya

அலைகளை ரசித்தபடி… கடல் உணவுகளை ஒரு பிடி!

கடல் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதேபோல் கடல் உணவுகள் என்றாலும் மிகமிகப் பிடிக்கும். கடலைப் பார்த்தவாறு கடல் உணவுகளைச் சாப்பிட்டால் இன்னும் வேற லெவலில் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருகிறது பாலவாக்கம் கடற்கரையில் உள்ள `கல்லோரம் சீ ஃபுட் ரெஸ்டாரென்ட்’. ஃப்ரெஷ்ஷான கடல் உணவுகளைச் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் வழங்கி வருகிறார்கள் சசிதரன், வெங்கடேஷ், பார்த்திபன் என்ற 3 நண்பர்கள். சிறுவயது முதல் மீன்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால் மீன் உணவுகளில் பல புதுமைகளைச் செய்து அசத்துகிறார்கள். “எங்கள் வீட்டில் வாரத்தில் ஏழு நாட்களில் ஆறு நாட்கள் மீன் குழம்புதான் என்று சிரித்தபடி பேசத்தொடங்கினார் உரிமையாளர்களில் ஒருவரான சசிதரன். நான், வெங்கடேஷ், பார்த்திபன் மூன்று பேருமே கல்லூரிக் காலத்து நண்பர்கள். மூன்று பேரும் ஒன்றாகத்தான் படித்தோம். படித்து முடித்தவுடன் மூன்று பேருமே வேறு வேறு துறைகளில் பணியாற்றினோம்.

எனக்கு ஐடி வேலை, பார்த்திபனுக்கு வெளிநாட்டு வேலை. வெங்கடேஷ்க்கு பிஸ்னஸ். கொரோனா காலத்திற்குப் பிறகு எந்தத் தொழிலும் சொல்லும்படி இல்லை. எங்களுக்கும் அந்த நிலைதான். இதனால் சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாமென யோசித்தோம். நாங்கள் மூன்று பேருமே மீனவக் குடும்பம்தான் என்பதால் மீன்களை வைத்து ஏதாவது தொழில் செய்யலாமென முடிவெடுத்தோம். அதன்படி, மக்களுக்கு சுத்தமான, பதப்படுத்தப்படாத ஆரோக்கியமான மீன்களைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராயபுரத்தில் ஒரு செட் அமைத்து காசிமேட்டில் மீனவர்களிடம் இருந்து நேரடியாக மீன்களை வாங்கி ஆன்லைன் முறையில் விற்பனை செய்து வந்தோம். மீன்களைப் பற்றி முழுவதுமாக எங்களுக்குத் தெரியும். எது நல்ல மீன்? எது சுவையான மீன்? ஆரோக்கியமான மீன் எப்படி இருக்கும்? ஐஸ் போடாத மீன் எப்படி இருக்கும்? குழந்தைகளுக்கு எந்த மீன் கொடுக்க வேண்டும்? என எல்லாமே எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால், செய்யும் தொழிலை உண்மையாக செய்து வந்தோம். அந்தத் தொழிலின் அடுத்தக்கட்ட முயற்சிதான் இந்தக் கல்லோரம் உணவகம்.கடல் உணவுகளை விரும்பிச் சாப்பிடக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு அலையைப் பார்த்தபடி கடல் உணவுகளைச் சாப்பிடக் கொடுத்தால் இன்னும் ஸ்பெஷலாக இருக்கும். அதனால், பாலவாக்கம் பீச்சில்அனைவரும் விரும்பும்படியான உணவகத்தைக் கொண்டுவந்து பலருக்கும் விருந்தளிக்கிறோம். சிறுவயதில் கடலோரம் செல்லும்போது வீட்டில் கல்லோரம் போய்ட்டு வாரோம் என பேச்சுவழக்கில் சொல்வோம். அதாவது, எங்கள் மீனவ ஊர்களில் கடலோரத்தை கல்லோரம் என்றே குறிப்பிடுவார்கள். இதனால், கல்லோரம் என்றே உணவகத்திற்கு பெயர் வைத்தோம். எங்கள் உணவகத்தின் ஸ்பெஷல் ஃபுட் என நிறைய அயிட்டம் இருக்கிறது. அதில் முதன்மையானது, லாப்ஸ்டர் தான். லாப்ஸ்டரை சிங்கி இறால் எனச் சொல்வார்கள். வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் கடல் உணவில் இதுவும் ஒன்று. இந்த லாப்ஸ்டரை எங்கள் உணவகத்தில் உயிருடன் வளர்த்து வருகிறோம். சாப்பிட வருபவர்கள் எந்த லாப்ஸ்டரை சாப்பிட வேண்டுமோ அவர்களே தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள். அதை அவர்கள் விரும்பும் சுவையில் மூன்று விதமாக சமைத்துக் கொடுக்கிறோம். காரத்தைப் பொருத்து அதன் சுவையும் மாறும். அதேபோல, நமது கடையில் அன்றன்றைக்கு பிடித்த மீன்களை நாங்களே நேரடியாக காசிமேடு சென்று வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்.

பாறை, வாவல், வஞ்சிரம் ஆகிய மூன்று மீன்களும் எப்போதுமே இங்கு இருக்கும். அதுபோக, சீசன் மீன்கள் எது கிடைக்குமோ அதுவும் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்கள் விரும்பும் மீன்களை அவர்களே தேர்ந்தெடுத்து சாப்பிடும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். முதலில் சாப்பிட வருபவர்கள் நண்டு சூப்பை டேஸ்ட் செய்கிறார்கள். அதன்பின், கடல் உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். ஸ்டார்ட்டர்ஸில் மட்டும் பலவகையான உணவுகள் இருக்கின்றன. நண்டு சதையை மட்டும் எடுத்து அதில் லாலிபாப் செய்து கொடுக்கிறோம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். நண்டு பெப்பர் ஃப்ரை, வஞ்சிரம் மீன், இறால் தவாக் கறி என அனைத்துமே கொடுக்கிறோம். இதெல்லாம் போக, கடல் உணவுகளில் என்னவெல்லாம் இருக்குமோ அதை ஸ்பெஷலாக சமைத்துக் கொடுக்கிறோம். சங்கரா, விலைமீன், கொடுவா, பாறை என சுவை அதிகம் இருக்கிற மீன்களில் தவா ஃப்ரை செய்து கொடுக்கிறோம். நெத்திலி 65, சுறா புட்டு, மீன் புட்டு, சில்லி ஃபிஷ், ஃபிஷ் மஞ்சூரியன், ஜிஞ்ஞர் ஃபிஷ், கார்லிக் ஃபிஷ் என பல வெரைட்டிகளில் மீன்கள் இருக்கிறது. இறாலில் மட்டும் 12 வகையான ஃப்ளேவரில் வேறுவேறு சுவையில் சைடிஷ் இருக்கிறது. அதேபோல, கடம்பாவிலும் 11 வகையான ஃப்ளேவர் இருக்கிறது.

இதுபோக, எங்களின் ஸ்பெஷல் டிஷ் அதாவது எங்களிடம் மட்டும் கிடைக்கும் உணவு என்றால் அது இறால் வறுத்த சோறு, மீன் வறுத்த சோறு. செட்டிநாடு மசாலாவை நாங்களே தயார்செய்து, இந்த வறுத்த சோறு செய்கிறோம். கடைக்கு வருகிற பலருக்கும் இந்த சோறு பிடித்திருக்கிறது. அதேபோல மீல்ஸில் காம்போ கொடுத்து வருகிறோம். சோறு, வஞ்சிரம் மீன் குழம்பு, சுறா புட்டு, ரசம் மற்றும் தயிர் என கொடுக்கிறோம். நமது கடையில் வஞ்சிரம் மீனில்தான் குழம்பு இருக்கும். மாலை நேரங்களில் மீனில் பார்பிக்யூ செய்து கொடுக்கிறோம். ஆறு வகையான பார்பிக்யூக்கள் இருக்கிறது. யாருக்கு எந்த மாதிரி சுவை பிடிக்குமோ அப்படி செய்யச்சொல்லி சாப்பிட்டுப் பார்க்கலாம். மீன் மற்றும் இறாலில் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் செய்து கொடுக்கிறோம். நண்டில் ரோஸ்ட் இருக்கிறது. 7 வகையான சுவையில் நண்டில் சைடிஷ் இருக்கிறது. இதுபோக, சைவப் பிரியர்களுக்கு பிடித்த உணவுகளும் இருக்கிறது. டிஃபன் காம்போவாக பரோட்டா, சப்பாத்தி, தோசை, இட்லி என நிறைய இருக்கிறது. இவற்றுடன் கடல் உணவுகளும் கிடைக்கும். நமது உணவகத்தின் செஃப் நல்ல அனுபவம் வாய்ந்த செஃப் என்பதால் எல்லா உணவுமே அதன் பாரம்பரிய சுவையில் இருக்கும். சாப்பிட்டுப் பார்ப்பவர்கள் நல்லா இருக்கு எனக்கூறுவதோடு, வீட்டுக்கும் வாங்கிச் செல்கிறார்கள். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சிதான்’’ என பூரிப்புடன் பேசி முடிக்கிறார் சசிதரன்.

– ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

You may also like

Leave a Comment

16 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi