* மருத்துவ இணை இயக்குனர் நேரில் ஆய்வு
* விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல்
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என் நேரு சாலையில் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி(53) என்பவர், கடந்த 2022ல் பல் வலிக்காக சிகிச்சை பெற்றார். அப்போது பல்லை பிடுங்கியதால், முகம் வீங்கி உடல்நிலை பாதித்தது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்திராணி 2023 ஏப்ரல் 16ம் தேதி உயிரிழந்தார்.
தொடர்ந்து, இந்திராணி உயிரிழப்புக்கு காரணம் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையே எனவும், இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்களில் இந்திராணி உட்பட 8 பேர் நோய்த்தொற்று, மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பெயர் பட்டியலை மருத்துவமனையில் ஒட்டி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்திராணியின் மகன் ஸ்ரீராம் என்பவர் வாணியம்பாடி நகர போலீசிலும், டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்தார். அதோடு மருத்துவ அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் ஆகியவற்றை சேர்ந்த டாக்டர்கள் குழு விசாரணையை தொடங்கியது. இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 10 பேருக்கு மூளையில் தொற்றும், 10 பேருக்கு பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டு 8 பேர் இறந்துவிட்டது தெரியவந்தது.
மேலும் டாக்டர்கள் மாதிரிகளை சேகரித்து சோதனை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனையில் சலைன் பாட்டிலை திறக்க சுத்தம் செய்யப்படாத அறுவை சிகிச்சை சாதனத்தை பயன்படுத்தியதும், அந்த பாட்டிலை மீதி திரவத்துடன் அப்படியே மூடி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த திரவத்தால் நோயாளிகளின் வாயை தூய்மைப்படுத்தி உள்ளனர்.
இதன் மூலம் வாய் வழியாக நரம்புப்பாதையில் நுழைந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இது, நரம்பு மண்டலத்தை மொத்தமாக பாதித்து காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மண்டை நரம்புவாதம், மூளை சீழ்கட்டி ஆகிய அறிகுறிகள் கொண்ட பாக்டீரியாவாகும். இதுதொடர்பான மருத்துவ குழுவினரின் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை, வாணியம்பாடி பி.ஜே.என். நேரு சாலையில் இருந்து, வாணியம்பாடி மண்டி தாதேமியான் தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த தனியார் பல் மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞான மீனாட்சி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மருத்துவ குழுவினரின் ஆய்வறிக்கையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுகுறித்த முழுமையான விசாரணை முடிந்தவுடன் விரைவில் அறிக்கை வெளியிடப்படும்’ என்றார்.
* நியாயம் கேட்டு 2 முறை கைதானவர் மீண்டும் புகார்
வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த இந்திராணியின் மகன் ஸ்ரீராம் (33), கடந்த 2023ல் மருத்துவமனைக்கு சென்று தாயின் இறப்புக்கு நியாயம் கேட்டுள்ளார். அவர் போலீசிலும் புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையில் ஸ்ரீராம் மிரட்டல் விடுப்பதாக மருத்துவமனை டாக்டரும் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் அவரை 2 முறை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், நேற்று முன்தினம் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்துக்கு சென்று உரிய விசாரணை நடத்தும்படி மீண்டும் புகார் தெரிவித்தார். அப்போது மருத்துவதுறை சார்ந்த அதிகாரிகளிடமிருந்து உரிய கடிதம் கிடைத்ததும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.