வாணியம்பாடி : வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியில் கி.பி.15ம் நூற்றாண்டை சேர்ந்த 2 சதிக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியில் கி.பி.15ம் நூற்றாண்டை சேர்ந்த 2 சதிக்கற்கள் பேராசிரியர் பிரபு மற்றும் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், முத்தமிழ்வேந்தன், சந்திரசேகரன் ஆகியோர் கொண்ட குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேராசிரியர் பிரபு தெரிவித்துள்ளதாவது:
வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் பழமையான கற்சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் குழுவினருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மூன்றரை அடி உயரமும், இரண்டரை அகலமும் கொண்ட 2 பலகை கற்களில் அமைக்கப்பட்ட சதிக்கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு கல்லில் வீரன் ஒருவர் தனது வலது கையில் போர் வாளினை ஊன்றிய நிலையில், தன் இடது கையில் கேடயத்தை ஏந்தியவாறு உள்ளார். அருகில் உள்ள கல்லில் வீரரின் வலது கையில் ‘கட்டாரி’ என்ற ஆயுதத்தை ஏந்தி தன் இடது கையை உயர்த்தி ஆவேசமாக போரிடுவது போல் காட்டப்பட்டுள்ளது.
இருவரது கழுத்திலும் ஆபரணங்களும் கைகளில் பூணும் காலகளில் வீரக் கழலும் அணிந்துள்ளார்கள். இடையில் கச்சையும் அதனோடு சிறு கத்தியும் வைத்துள்ளார்கள். ஒரு நடுகல்லில் வீரனின் அருகில் அவரோடு தம் உயிரையும் மாய்த்துக் கொண்ட அவரது மனைவியின் உருவமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அருகில் உள்ள நடுகல்லில் வீரரின் அருகே இருபுறமும் 2 பெண்ணுருவங்கள் காணப்படுகிறது. அவர்கள் அவ்வீரரின் 2 மனைவியராவர். 2 நடுகற்களிலும் செதுக்கப்பட்ட பெண்ணுருவங்களின் வலது கரங்களில் ‘கள்’ குடங்களை ஏந்திய நிலையில், இடது கரத்தில் மலர்களை பிடித்தபடி காணப்படுகின்றனர். இது அவ்வீரர்கள் போர்க்களத்தில் போரிட்டு இறந்து சொர்க்கலோகம் சென்றனர் என்பதை அறிவிப்பதாகும்.
பொதுவாக நடுகற்களில் வீரர்களோடு பெண்ணுருவங்களும் இடம்பெறும் போது அவற்றை சதிக்கல் என அழைப்பது வழக்கமாகும். அவ்வகையில் இங்குள்ள மூன்று கற்களும் போரில் உயிரிழந்த வீரர்களையும், அவர்களோடு தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்ட அவர்களது மனைவியர்களையும் நினைவுகூறும் விதமாக வடிக்கப்பட்டவையாகும்.
இவ்விரு சதிக்கற்களுக்கும் அருகே ஒரு காமாட்சியம்மன் சிலையும் காணப்படுகின்றது. அச்சிலையானது 2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டதாகும். இச்சிலை நடுகல் அமைக்கப்பட்டதன் பிற்காலத்தில் இங்கு வைக்கப்பட்டதாக தெரிகிறது. அந்நடுகல் குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டபோது, `காட்டு மாரியம்மன்’ என்ற பெயரில் இதனை வழிபட்டு வருவதாக தெரிவித்தனர்.
இக்கல்லின் அமைப்பினை பார்க்கும்போது இவை போரில் மடிந்த வீரர்களுக்கும், அவ்வீரர்களோடு உயிர் நீத்த அவர்தம் மனைவியருக்குமான நினைவுக் கற்களாகும். செதுக்கப்பட்டுள்ள உருவ அமைப்பினை பார்க்கும்போது இக்கல் கி.பி.15ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சின்னமான இதுபோன்ற அரிய வரலாற்று தடயங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கிடைத்து வருவது இப்பகுதியின் வரலாற்று பின்புலத்தினை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.