போபால்: மத்தியப்பிரதேசம் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலின் பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று காலை 5.40 மணிக்கு மத்தியப்பிரதேசத்தின் போபால் நோக்கி வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் சுமார் 37 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் கல்ஹார் ரயில்நிலையத்தை கடந்தபோது ரயிலின் 14வது பெட்டியின் பேட்டரி பெட்டியில் இருந்து தீப்பற்றி புகை வந்துள்ளது.
இதனை தொடர்ந்து குர்வாய்-கைதோரா ரயில்நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பேட்டரி பெட்டியை அகற்றி அதில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. வேறு ரயில் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.