சென்னை – காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது. சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ வேகம் வரை ரயிலை இயக்க திட்டமீட்டுள்ளனர். 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, நவீன கழிவறைகளை கொண்டிருக்கும். ஒரு பெட்டியில் 104 பேர் அமர்ந்தும், 200 பேர் நின்று கொண்டும் பயணிக்கலாம்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியில் கவனம் செலுத்தப்படுகின்றன. இதுதவிர, அம்ரித் பாரத் ரயில் (சாதாரண வந்தே பாரத் ரயில்), வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன. முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. தொடர்ந்து, ஐ.சி.எஃப் ஆலை அருகே ரயிலை இயக்கி சோதனை, உள் மற்றும் வெளிப் பகுதிகளில் பல்வேறு சோதனைகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை – காட்பாடி இடையே இன்று நடைபெறவுள்ளது.
முதலில் வில்லிவாக்கத்தில் இருந்து ஆக.3-ம் தேதி காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். தொடர்ந்து, அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10.10 மணிக்கு அடையும். வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10.15 மணிக்குபுறப்பட்டு, அரக்கோணம் வழியாக காட்பாடியை 11.55 மணிக்கு அடையும். காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 180 கி.மீ. வேகம் வரை ரயிலை இயக்க பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.